18-ம் கால்வாய்த் திட்டம் சீரமைக்கப்படுமா?

போடி: தேனி மாவட்டத்தில் உள்ள 18-ம் கால்வாய்த் திட்டப் பாதையில் தடுப்புச் சுவர் அமைத்துத் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  த
18-ம் கால்வாய்த் திட்டம் சீரமைக்கப்படுமா?

போடி: தேனி மாவட்டத்தில் உள்ள 18-ம் கால்வாய்த் திட்டப் பாதையில் தடுப்புச் சுவர் அமைத்துத் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 தேனி மாவட்டத்தில் பழனிவேல்ராஜன் (18-ம்) கால்வாய்த் திட்டம், 2008 நவம்பர் 24-ம் தேதி நிறைவு செய்யப்பட்டது.

 ரூ.33 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாற்றில் வைரவனார் அணைக்கட்டு பகுதியிலிருந்து தொடங்கி சின்னதேவியம்மன் குளம் வரை பழனிவேல்ராஜன் கால்வாயாகவும், அங்கிருந்து கோடாங்கிப்பட்டி கண்மாய் வரை சுத்த கங்கை ஓடையாகவும் இக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 44 கண்மாய்கள் தண்ணீர் பெறுகின்றன.

 கடந்த ஆண்டு சோதனை ரீதியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் கால்வாயின் தொடக்கப் பகுதியிலிருந்து 700-வது மீட்டர், 12-வது கிலோ மீட்டரிலிருந்து 13-வது கி.மீட்டர் வரை, 26-வது கி.மீட்டரிலிருந்து 26.8-வது கி.மீட்டர் மற்றும் கரியனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததால் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.

 மேலும், கால்வாயில் அளவுக்கு மீறி நீர்வரத்து இருக்கும்போது அந்த நீரை வெளியேற்ற வசதியாக கால்வாயின் 12.5, 19, 26.15 ஆகிய கி.மீட்டர் தூரங்களில் உள்ள இடங்களில் நீர் வெளியேற்றும் களிங்குகளும் கட்டப்படவில்லை. நீர் திறப்பின்போது இக்குறைபாடுகள் தாற்காலிகமாக சரிசெய்யப்பட்டன.

 நிரந்தர தீர்வுக்கு, பழனிவேல்ராஜன் கால்வாய் திட்ட அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அக்டோபர் 3-ம் தேதி முதல் பெரியகுளம் மஞ்சளார் வடிநில வட்ட அலுவலகக் கட்டுப்பாட்டில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பழனிவேல்ராஜன் கால்வாய் திட்ட விவசாயிகள் சங்கச் செயலாளரும், டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான அ. திருப்பதிவாசகம் கூறியது:

 இப்போது முல்லை பெரியாறு, வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இக் கால்வாயில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, கால்வாயை விரைவாகச் சீர்படுத்தினால் கண்மாய்களில் முழுமையாகத் தண்ணீரைத் தேக்க முடியும். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருப்பதிவாசகம். இச் சங்கத்தின் தலைவர் ராமராஜ், துணைத்தலைவர்கள் சலேத்து, காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 தடுப்புச் சுவர் இல்லாத கால்வாய் பகுதி.18-ம் கால்வாயில் தண்ணீர் வரத்துக்காக காத்திருக்கும்

 விவசாயி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com