யானைகள் வழித்தடத்துக்கு 4,000 ஹெக்டேர்: விரைவில் உதகை வனத்துறை அறிவிக்கை

உதகை: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பாக வனத்துறையின் இறுதி அறிவிக்கை விரைவில் வெளியிடப்படுகிறது.  நீலகிரி மாவட்டத்தில் வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மாயார், வாழைத
யானைகள் வழித்தடத்துக்கு 4,000 ஹெக்டேர்: விரைவில் உதகை வனத்துறை அறிவிக்கை
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பாக வனத்துறையின் இறுதி அறிவிக்கை விரைவில் வெளியிடப்படுகிறது.

 நீலகிரி மாவட்டத்தில் வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மாயார், வாழைத்தோட்டம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் கேரளத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் இடம் பெயர்ந்துவரும் யானைகள் தருமபுரி வழியாக கர்நாடகத்துக்கும், தெங்குமரஹாடா வரையிலும் செல்லும்.

 ஆனால், பொக்காபுரம் மற்றும் மசினகுடி பகுதிகளில் தனியார் ரிசார்ட்டுகளும், ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டதால் யானைகள் தங்கள் வழித்தடத்தைவிட்டு விலகி ஊருக்குள் நுழைவதால் பயிர்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதை தவிர்க்க யானைகளின் வழித்தடத்தை முறையாக அறிவிக்க வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் யானைகள் வழித்தடம் குறித்த எல்லைப் பகுதியை வனத்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்திருந்ததால் கடந்த பிப்ரவரி மாதத்தில் சீகூர் பாலம், மசினகுடி மற்றும் ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது.

 அப்போது யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டில் யானை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வழிகாட்டியையே தற்போதும் ஏற்றுக்கொண்டுó அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அப்போது இக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் எமன உறுதியளிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், யானைகள் வழித்தடம் தொடர்பான அறிவிக்கை தற்போது

 வனத்துறை தயாரித்துள்ளது. இது ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிக்கையில் பொக்காபுரம், மசினகுடி, வாழைத்தோட்டம், கறிவேப்பிலை எஸ்டேட், நார்தன் ஹே எஸ்டேட், சிங்காரா ஆகிய பகுதிகளிலும், சோலூர் மற்றும் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுமாக மொத்தம் 4,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் யானை வழித்தட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் சோலூர்மட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 143 பேரின் நிலங்களும், மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 153 பேரின் நிலங்களும் யானை வழித்தட எல்லைக்குள் வருகின்றன. இவற்றில் கடநாடு மற்றும் உல்லத்தி

 ஊராட்சிகளின் நிலப் பகுதிகளும் அடங்கும்.

 இந்த அறிவிக்கை விரைவில் வெளிடப்பட்டால்தான் யானை வழித்தட நிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலங்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும்.

 யானை வழித்தட நிலங்களாக அறிவிக்கப்படும் பகுதிகளில் தற்போது ஏராளமான தனியார் ரிசார்ட்டுகளும் இருப்பதால் இந்த அறிவிக்கை வெளியான பின்னர் யானை வழித்தடப் பகுதியில் வர்த்தக ரீதியிலான எத்தகைய நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, இந்த அறிவிக்கை வெளியான பின்னர்தான் பொக்காபுரம் மற்றும் மசினகுடி பகுதிகளிலுள்ள தனியார் ரிசார்ட்டுகளின் எதிர்காலமும் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com