மத்திய அரசின் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலை மின் மோட்டார் விரைந்து வழங்கப்படுமா?

சீர்காழி : மத்திய அரசின் 5 ஆண்டுத் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்க 2010-11 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கியும், இ
மத்திய அரசின் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலை மின் மோட்டார் விரைந்து வழங்கப்படுமா?

சீர்காழி : மத்திய அரசின் 5 ஆண்டுத் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்க 2010-11 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கியும், இதுவரை மின் மோட்டார் வழங்கப்படாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 மேட்டூர் அணை ஜூலை மாதம் திறக்கப்பட்டும் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம், சீர்காழிக்கு வாய்க்கால், ஆறுகளில் இதுவரை முழுமையாகத் தண்ணீர் வந்து சேரவில்லை. சீர்காழியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் விவசாயத்தையே முதன்மையான தொழிலாகச் செய்து வருகின்றனர்.

 குறுவை நெல் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். சம்பா நெல் சாகுபடியையாவது சிறந்த முறையில் செய்து, குறுவைக் கடனை அடைக்கலாம் என நம்பி இருந்த விவசாயிகளுக்கு, தற்போது மேட்டூர் அணை தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை.

 ஓரளவு கிடைத்த தண்ணீரைக் கொண்டு விதைத்த விவசாயிகள், தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச இயலாத நிலையில், முளைத்த நாற்றுகள் காய்ந்து வருகின்றன.

 இந்த நிலையில், விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி, தண்ணீரை முழுமையாகப் பெறும் போது, மழைக் காலம் தொடங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பயிர்களை முற்றிலும் அழித்துவிடும்.

 அதன்பிறகு, நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட வேண்டும். இதுபோன்று கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவதால், மத்திய அரசு 5 ஆண்டுத் திட்டமான தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார் வழங்க முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கி வருகிறது.

 கடந்த 2009-10 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு, சீர்காழி வட்டத்தில் சுமார் 400-க்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்தனர். தற்போது 2010-11 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் மூலம், நாகை மாவட்டத்திற்கு 1000 மின் மோட்டாருக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதில் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்திற்கு 200 மின் மோட்டாருக்கு ரூ.  2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார்களை ஏப்ரல் முதல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், 6 மாதங்கள் ஆகியும் வேளாண் துறையினர் இதுவரை மின் மோட்டார்களை வழங்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

 இதுகுறித்து கொண்டத்தூர் விவசாய சங்கத் தலைவர் ஆர். பெருமாள் கூறியது:

 நாகை மாவட்டம், காவிரி டெல்டா பகுதியில் போதிய மழை இல்லை. காவிரியிலும் நீர்வரத்து போதிய அளவு இல்லை. இந்த நிலையில், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வேளாண் துறை விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார்களை வழங்கியது.

 நிகழாண்டில் மானிய விலையில் மின் மோட்டார் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும், விவசாயிகளுக்கு மின் மோட்டார் வழங்கப்படவில்லை. மின் மோட்டார்களை விரைந்து வழங்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2.9.10 அன்று மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் அவர்.

 இதுகுறித்து நாகை வேளாண் துறை இணை இயக்குநர் உ. ராஜேந்திரன் கூறியது:

 விவசாயிகளுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தரச் சான்றிதழ் வந்தவுடன் விவசாயிகளுக்கு மின் மோட்டார்கள் விரைந்து வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com