அடிக்கடி மின் துண்டிப்பு: அவதிப்படும் கடலூர்வாசிகள்

அறிவிக்கப்பட்ட நேரங்கள் தவிர மேலும் பல நேரங்களில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அடிக்கடி மின் துண்டிப்பு: அவதிப்படும் கடலூர்வாசிகள்
Updated on
2 min read

கடலூர், ஆக. 31: அறிவிக்கப்பட்ட நேரங்கள் தவிர மேலும் பல நேரங்களில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், கடலூர் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

கடலூர் நகருக்கு 18 கே.வி.ஏ. திறன்கொண்ட நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்தும், 20 கே.வி.ஏ. திறன்கொண்ட கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகள், பிரதான கடை வீதியான லாரன்ஸ் சாலையின் கிழக்குப் பகுதி ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன. கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் புதுப்பாளையம், தேவனாம்பட்டினம், திருப்பாப்புலியூர், கடலூர் முதுநகர், வண்டிப்பாளையம் மற்றும் கேப்பர் மலையில் உள்ள எம்.புதூர் உள்ளிட்ட சில கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

கடலூர் நகரைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, அறிவிப்பு வெளியிட்டு, தினமும் 2  மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நத்தப்பட்டு துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் வெட்டைத் தவிர மற்ற நேரங்களில் மின்துண்டிப்பு ஏற்படுவதில்லை, நகரில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் (நகரில் மொத்த வீடுகள் சுமார் 40 ஆயிரம்), 2-ம் நிலை பிரதானக் கடை வீதிகள், அமைந்துள்ள பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

சில நாள்களில் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் (நகரில் பெரும்பகுதி) 2 மணி நேரத்துக்கு ஒருமுறை, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. லேசான மழை பெய்தால் போதும் உடனடி பாதிப்பு மின் துண்டிப்புதான். இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மின் துண்டிப்புக்கான காரணம் பற்றி எந்தத் தகவலும் மின்சார  வாரியத்தால் தரப்படுவது இல்லை.

மின் விநியோகத்தைப் பொறுத்தவரை, நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறுவோர் முதல்தரக் குடிமக்களாகவும், கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறுவோர் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் பாவிக்கப்படுவதாக, மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சங்கடங்கள் இல்லை

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரைக் கேட்டதற்கு அவர் தந்த விளக்கம்: கடலூர் நகரில் பெரும்பகுதி வீடுகள், வணிக நிறுவனங்கள் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் இருந்துதான் மின்சாரம் பெறுகின்றன. ஆனால் ஏராளமான சந்துகள், சிறு சிறு தெருக்கள், தென்னந்தோப்புகள் வழியாக மின் கம்பிகள் செல்கின்றன.

இதனால் கேப்பர்மலையில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு, பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. எங்கேனும் மரக்கிளை அல்லது தென்னை மட்டை பட்டுவிட்டால் போதும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். ஆனால் நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் இத்தகைய சங்கடங்கள் அதிகம் இல்லை. ஆனாலும் நத்தப்பட்டு துணை மின்நிலையப் பகுதிக்கு அதிகமான களப்பணியாளர்கள் வழங்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் கேப்பர் மலை துணை மின் நிலையப் பகுதிகளுக்கு, குறிப்பாக திருப்பாப்புலியூர் பிரிவில் 16 களப் பணியாளர்களுக்குப் பதில் 2 பேர் மட்டும் உள்ளனர். புதுப்பாளையம் பகுதியிலும் 16 பேருக்குப் பதில் 2 பேர் மட்டுமே உள்ளனர். மாவட்டத்தில் 2,800 மின் பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் 1,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆனால் கண்காணிப்புப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு உள்ளன. இதன் விளைவாக 2 ஆடுகளை மேய்க்க 4 மேய்ப்பர்கள் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டு உள்ளது. தினக்கூலிப் பணியாளர்களைக் கொண்டு சமாளிக்கப்பட்டு வருகிறது. கேப்பர் மலை துணை மின் நிலையப் பகுதிகளில், லைன்கள் மீது படும் மரக்கிளைகளை வெட்டுதல் உள்ளிட்ட களப்பணிகளைச் செய்ய போதிய ஆள்கள் இல்லை. பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

புதிய துணை மின்நிலையம்

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராமிடம் கேட்டதற்கு, "கடலூரில் அதிக இணைப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மரக்கிளைகளால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. களப்பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை இருந்தால் கவனிக்கப்படும். தேவனாம்பட்டினத்தில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. நிலம் தயாராக உள்ளது. விரைவில் பணி தொடங்கும். புதிய துணைமின் நிலையம் அமைந்த பிறகு, இத்தகைய பிரச்னை இருக்காது' என்றார் ரவிராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com