அறுவைச் சிகிச்சை துணிகளை துவைப்பதில் சிக்கல்: அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய தண்ணீர் இல்லாததால் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணிகளையும், நோயாளிகளின் படுக்கை விரிப்புகளையும் உரிய நேரத்திலும், முழுமையாகவும் துவைத்து சுத்தம் ச
அறுவைச் சிகிச்சை துணிகளை துவைப்பதில் சிக்கல்: அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை
Updated on
2 min read

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய தண்ணீர் இல்லாததால் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணிகளையும், நோயாளிகளின் படுக்கை விரிப்புகளையும் உரிய நேரத்திலும், முழுமையாகவும் துவைத்து சுத்தம் செய்ய இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

   அரசு மருத்துவமனையில் தற்போது 2268 உள்நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 அறுவைச் சிகிச்சை அறைகளில் தினமும் சுமார் 150 அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.

   உள்நோயாளிகள் தங்கும் படுக்கைகளுக்கு வாரம் ஒருமுறை படுக்கை விரிப்பை மாற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் ஆடைகள், டாக்டர்கள், செவிலியர்கள் அணியும் ஆடைகளை தினமும் சுத்தம் செய்யும் கட்டாய நிலை உள்ளது. அறுவைச் சிகிச்சையின்போது வெளிப்படும் நோயாளிகளின் ரத்தம் உள்ளிட்ட கறைகளை உடனுக்குடன் துவைத்தால் மட்டுமே அவை சீராகும்.

   இப்படியாக தினமும் சுமார் 300 முதல் 500 துணிகள் வரையில் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. துணிகளைத் துவைத்து சுத்தம் செய்ய தனிப் பிரிவு மருத்துவமனையில் உள்ளது. இப்பிரிவு கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் துணிகளைத் துவைக்க நீராவி மூலம் செயல்படும் 3 இயந்திரங்களும், துணிகளை உலரவைக்கும் இயந்திரமும், அதைச் சூடாக்கித் தேய்ப்பதற்கு தனி இயந்திரமும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரிவில் 26 பேர் வரை பணியில் இருந்தனர்.

   இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகத் துணியை உலர வைக்கும், இஸ்திரி செய்து சீர்படுத்தும் இயந்திரங்கள் பழுதாகிக் கிடக்கின்றன. மேலும் துணியை துவைத்து சுத்தமாக்கப் பயன்படும் இயந்திரங்கள் பழமையானவை என்பதால் அவற்றால் துணியில் படிந்திருக்கும் ரத்தக் கறைகளை முழுமையாக நீக்க முடியாத நிலையும் உள்ளது.

   துணிகளைத் துவைக்க தினமும் குறைந்தது 5 கிலோ சோப்பு, பிளீச்சிங் பவுடர் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இப்பிரிவில் காலை முதல் மாலை வரையில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தினால்தான் துணிகளைத் துவைக்க முடியும்.

   இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஆழ்துளைக் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாமல் போனதால் தினமும் 4,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் துணிகளை முழுமையாகத் துவைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், துணிகளில் இருக்கும் ரத்தம் உள்ளிட்ட கறைகளை முழுமையாக நீக்க  முடியாமல் கறை படிந்தே காணப்படுகின்றன.

   சரியாக துவைக்கப்படாத துணிகளை நோயாளிகளுக்கான படுக்கையில் விரித்தாலும் அவை பழைய துணிகளைப் போலவே காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சலவைப் பிரிவில் இப்போது ஏழு பெண் ஊழியர்கள் உள்பட 16 பேர் மட்டுமே உள்ளனர்.

   பணியாளர் பற்றாக்குறையாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சைக்கான துணிகளைத் துவைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவசர அறுவைச் சிகிச்சைகள் தவிர மற்ற அறுவைச் சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது என்கின்றனர் டாக்டர்கள்.

   இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.சிவகுமாரிடம் கேட்டபோது, மருத்துவமனை சலவைப் பிரிவுக்கு புதிதாக 2 நீராவி சலவை இயந்திரங்கள் தலா  4 லட்சத்திலும் மின்சார உலர் சலவை சாதனம்  4 லட்சத்திலும் மொத்தம்  12 லட்சத்தில் வாங்கப்பட உள்ளன.  வைகை ஆற்றிலிருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் மருத்துவமனைக்கு விரைவில் தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது. அப்போது மருத்துவமனைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; பற்றாக்குறை இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com