தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பயிர்களைச் சேதப்படுத்தும் பப்பாளி மாவுப் பூச்சிகள்

புதுச்சேரி: தட்பவெப்பநிலை மாற்றத்தால் பயிர்களில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பப்பாளி மாவுப் பூச்சி அதிகம் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாவுப் பூச்சி குறித்து பு
தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பயிர்களைச் சேதப்படுத்தும் பப்பாளி மாவுப் பூச்சிகள்

புதுச்சேரி: தட்பவெப்பநிலை மாற்றத்தால் பயிர்களில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பப்பாளி மாவுப் பூச்சி அதிகம் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மாவுப் பூச்சி குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

"பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்' என்ற பப்பாளி மாவுப்பூச்சி முதல்முதலில் 1992-ம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் தோன்றி 2008-ம் ஆண்டு இந்தியாவில் பரவி 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பப்பாளி மரத்தின் இலை, மரம், தண்டு மற்றும் பழங்களையும் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

சாறு உறிஞ்சும் இந்தப் பூச்சிகள் பப்பாளி மட்டுமின்றி மற்ற பயிர்களான மா, கறிப்பலா, வாழை, கொய்யா, பருத்தி, மரவள்ளி, நெய்வேலி காட்டாமணக்கு, எலுமிச்சை, துளுக்க சாமந்தி, கத்தரி, வெண்டை, தக்காளி, சூரியகாந்தி, பயிறு வகைகள், பார்த்தினியம், ஆமணக்கு, பூசணி வகைகள், தேக்கு, குரோட்டன்ஸ், சீதாப்பழம், புளிச்சக்கீரை மற்றும் சாலையோரங்களில் உள்ள மரங்களையும் தாக்கி சேதப்படுத்துகின்றன.

அதிக வெப்பம், மிகுந்த காற்றின் ஈரப்பதம், கரியமிலவாயுவின் அதிகமான கசிவு, மாவு போன்ற பாதுகாப்பு கவசம், முன்னுக்குப் பின் முரணான முறையில் ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துதல், குறைவான நன்மை செய்யும் பூச்சிகள் வயலில் இருப்பது போன்ற காரணங்களால் இந்தப் பூச்சியின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது.

மேலாண்மை முறைகள்

களைகளை அகற்றி வயல்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். பூச்சிகள் அதிகம் பரவாமல் தடுக்க தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச் செடிகளைப் பிடுங்கி எரிக்க வேண்டும்.

இளம் பருவத்திலிருந்து பூச்சி மற்றும் எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தகுந்த பூச்சி மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.

வயல்களில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் அதிகம் இருக்கும்போது ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சேதம் ஆரம்பிக்கும்போது இரை விழுங்கிகளான சிகப்பு ஆஸ்திரேலியா வண்டுகளை ஏக்கருக்கு 300 என்ற அளவிலும், கருப்பு ஆஸ்திரேலிய பொறி வண்டுகளை ஏக்கருக்கு 400 என்ற அளவிலும், பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளை ஏக்கருக்கு 1000 என்ற அளவிலும் ஏவி விட வேண்டும்.

இந்த வண்டுகள் பெங்களூரில் உள்ள உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகத்தில் கிடைக்கும். சேதம் குறைவாக இருந்தால் 2 சதவீத வேப்ப எண்ணெய்யை 20 மில்லி எடுத்து 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சதவீத புங்கம் எண்ணெய் 20 மில்லி எடுத்து 1 லிட்டர் தண்ணீர் அல்லது மீன் எண்ணெய் ரோஸின் சோப்பு 25 கிராமை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு பங்கு மண்ணெண்ணெய், ஐந்து பங்கு பச்சரிசி தவிடு ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து மாவுப் பூச்சியின் மேல்படும்படி தூவும்போது மாவு பூச்சிகள் இறக்க நேரிடும்.

உயிரி ரக பூஞ்சாணக் கொல்லிகளான "பெவேரியா பேசியானா' ஒரு கிலோ மற்றும் "வெர்டிஸிலியம் லிகானி' ஒரு கிலோ என்ற விகிதத்தில் கலந்து ஓர் ஏக்கர் பரப்பளவில் மாலை நேரத்தில் அதிக திறன் கொண்ட தெளிப்பான் மூலம் மாவுப் பூச்சியின் மீது படும்படி தெளிக்க வேண்டும்.அப்போது இந்த பூஞ்சாணங்கள் 5 தினங்களில் நோயை உருவாக்கி மாவுப்பூச்சிகளை அழிக்கும்.

இந்த உயிரி ரக பூஞ்சாணக் கொல்லிகள் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கிடைக்கும். சேதம் அதிகமாகக் காணப்பட்டால் ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிக திறன் கொண்ட தெளிப்பானைப் பயன்படுத்தி தெளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com