வேலைவாய்ப்பு தேடுவோர் 70 லட்சம் பேர்

சென்னை, செப். 14: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 36 வேலைவாய்ப்பு
Updated on
2 min read

சென்னை, செப். 14: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தின் கீழ் | 5.02 கோடியில் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் புதிய முறை புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

முன்னதாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கடந்த 31.12.2009 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது. இதில் பெண்கள் 28.43 லட்சம் பேர்.

84 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற கதையாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் விரிவுரையாளர் முதல் மருத்துவமனை ஊழியர் வரை 57 வகையான பணியிடங்களில் கடந்த 13.5.2006 முதல் 2009 வரை 84,407 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

எப்போதுமே, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், மருத்துவப் படிப்புகளில் (அலோபதி முதல் அக்குபஞ்சர் மருத்துவர் வரை) பட்டம் பெற்ற 21,459 பேர் வேலைவாய்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 1.20 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2.21 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1.45 லட்சம் பேரும், எம்.எட். பட்டம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 23 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

மின் ஆளுமை மயமாக்கும் பணி:

இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் (உயிர் பதிவேட்டு) விவரங்களை கணினி மூலம் இணையதளத்தில் ஏற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதன்மூலம், பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.

கடந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின்னர் சுமார் 7.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்புப் பதிவுக்கான ஏராளமான விண்ணப்பங்கள் அந்தந்தப் பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, ஆசிரியர்கள் உதவியுடன் விவரங்களைப் பதிவு செய்யும் புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:

இதுதவிர, கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகஙகளில் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை நிரப்பி, வேலைவாய்ப்புப் பதிவு அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் மனு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத் தவறியவர்களில் 1.50 லட்சம் பேர் இந்தச் சிறப்பு சலுகையின் மூலம் பதிவு செய்துள்ளனர்.

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, வேலைதேடும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com