கட்டடக் காடாகும் நீலகிரி மலை கோத்தகிரி காப்பாற்றப்படுமா?

உதகை: கோத்தகிரியில் 24 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர் ஆதாரமான பெரியசோலை பகுதியில், கடந்த ஆண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் புதிதாக பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏ
கட்டடக் காடாகும் நீலகிரி மலை கோத்தகிரி காப்பாற்றப்படுமா?
Updated on
1 min read

உதகை: கோத்தகிரியில் 24 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர் ஆதாரமான பெரியசோலை பகுதியில், கடந்த ஆண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் புதிதாக பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இமயமலைக்கு அடுத்த மிகப் பழமையான மலை நீலகிரி. பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 இந்நிலையில் மனிதர்கள் தங்கள் சொகுசுக்காக சில நாள்கள் மட்டுமே வந்து தங்குவதற்காக  மலைபிரதேசங்களில் பங்களாக்களை கட்டி வருகின்றனர். இது அப்பகுதியின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதித்து வருகிறது.

 நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி 3000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஏன் இடிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து நீலகிரிக்கு வந்து  கட்டடங்களைக் கட்டுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளின் ஆதரவும் உள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப் பெரிய எச்சரிக்கை. ஆனாலும், அதை மறந்துவிட்டு நீலகிரி மலையையே கட்டடக் காடுகளாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.  நீலகிரியில் இயற்கைக்  காடுகள் எஞ்சியுள்ள கோத்தகிரி பகுதியிலும் கட்டடங்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு தொடர்ந்து அனுமதியும் வழங்கப்படுவதுதான் வியப்பு.

 வானளாவ உயர்ந்த மரங்கள், வன விலங்குகள், விதவிதமான பறவைகள்  வசிக்கும் அடர்ந்த காடான கோத்தகிரி பகுதியில் சுமார் 24 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ளது பெரியசோலை பகுதி. 90 டிகிரிக்கும் அதிகச் சரிவான மலைப் பகுதியில் பிரமாண்ட கட்டடங்கள் உருவாகி வருகின்றன. கடந்த ஆண்டில்

இப் பகுதியில்தான் அதிகளவில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

÷இப்பகுதி ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பள்ளத்தாக்கு. எனவே இங்கும் கட்டடம் கட்ட அனுமதித்துள்ளது விவாதத்திற்கு உள்பட்டுள்ளது.

 எனவே, இயற்கை வளம் எஞ்சியுள்ள கோத்தகிரியை காப்பாற்ற வேண்டும், இதைப்போல பாதுகாப்பற்ற பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதியளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை உருவாகாது என எச்சரிக்கின்றனர் கோத்தகிரி சுற்றுச்சூழல் அமைப்பினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமீறல்கள் தொடர்கதையாகிவரும் சூழலில், கோத்தகிரி பகுதியையாவது பாதுகாக்க அரசு விழித்துக் கொள்ளுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com