பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி

சென்னை, செப்.20: பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.   தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோ
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி
Updated on
2 min read

சென்னை, செப்.20: பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

  தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது சித்த மருந்துகளின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே தமிழக அரசு பரப்பியதைப் போன்று பன்றிக் காய்ச்சலைத்  தடுப்பதற்கும் சித்த மருந்துகள் பயன்படும் என்பதை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

  இது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் தெ.வேலாயுதம், சித்த மருத்துவ நிபுணர் ஜி.சிவராமன்

ஆகியோர் கூறியதாவது:-

  ""கொசுக்கள் மூலம் பரவி காய்ச்சலுடன் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தக்கூடிய கொடிய சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்தான நிலவேம்புக் குடிநீர் (தூள்) தொடர்ந்து பலன் அளித்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நிலவேம்புக் குடிநீர் (தூள்), பிரம்மானந்த பைரவ மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகியவற்றை பொது மக்களுக்கு தமிழக அரசு இலவசமாக விநியோகிக்க உத்தரவிட்டது.

  இப்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் ரூ.100-ம், தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகக் குறைந்த செலவிலான சித்த மருந்துகளை பன்றிக் காய்ச்சல் தடுப்புக்குப் பயன்படுத்த முடியும்.

தடுப்பு சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய "பிரம்மானந்த பைரவம்' மாத்திரை, "அமுக்கரா' மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது.

 அதாவது, "கபசுரக் குடிநீரை' (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்; அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும். பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்துகளை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம்.

எங்கே கிடைக்கும்? பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் மேலே குறிப்பிட்ட கபசுரக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட சித்த மருந்துகள் தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ முறை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கும்.

 எனினும் பொது மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த சித்த மருந்துகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com