அதிமுகவுக்கு அடித்த "ஜாக்பாட்'!

முன்னாள் பிரதமர் செüத்ரி சரண்சிங்கின் மகனும் ராஷ்ட்ரீய லோகதளக் கட்சித் தலைவருமான அஜீத் சிங்கின் சென்னை விஜயமும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடனான அவரது சந்திப்பும் பரப்பரப்பாகப் பே
அதிமுகவுக்கு அடித்த "ஜாக்பாட்'!
Updated on
3 min read

முன்னாள் பிரதமர் செüத்ரி சரண்சிங்கின் மகனும் ராஷ்ட்ரீய லோகதளக் கட்சித் தலைவருமான அஜீத் சிங்கின் சென்னை விஜயமும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடனான அவரது சந்திப்பும் பரப்பரப்பாகப் பேசப்படாவிட்டாலும், அதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. தமிழகத்தைவிட இதன் முக்கியத்துவம் தில்லியில்தான் மிகவும் அதிகமாகப் பேசப்படுகிறது.

 ÷உத்தரப் பிரதேச அரசியலில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்று ராகுல்காந்தி முடிவெடுத்திருப்பதன் தொடர்ச்சியாக, ராஷ்ட்ரீய லோகதளம், காங்கிரஸýடன் கைகோத்துச் செயல்பட இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால், அஜீத் சிங்கின் மகனும், மதுரா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஜெயந்த் செüத்ரியும் ராகுல் காந்தியும் சந்தித்துப் பேசியதும், அதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரித்திருப்பதும் உத்தரப் பிரதேசத்தில் புதிய அணி உருவாகும் சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 ÷இதற்கிடையில், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளக் கட்சி கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் ஒன்றை அறிவித்தது. போராட்டத்தில் பங்கு பெறும்படி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் அஜீத் சிங். அந்தப் போராட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா தனது பிரதிநிதியாகத் தம்பிதுரையை கலந்துகொள்ளச் செய்தார்.

 ÷தனது போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் அஜீத் சிங் சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்ததாகப் பத்திரிகைச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இதன் பின்னணியில், அதிமுக ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத்தை சாமர்த்தியமாக அரங்கேற்றி இருப்பது சற்று கூர்ந்து கவனித்தால் புரியும்.

 ÷அதிமுகவின் மிகப்பெரிய பலவீனம், தில்லியில் தனது சார்பில் காய்களை நகர்த்தவும், நட்பு வட்டத்தை உருவாக்கவும் சாமர்த்தியமுள்ள நபர்கள் இல்லாதது. எம்.ஜி.ஆர். இருந்தவரை காங்கிரஸ் தலைமையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களை அவர் முக்கியத்துவம் தந்து நெருக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு, இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தனர்.

 ÷ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியபோது, அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார்.

 ÷ஜெயலலிதா மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக பாரதிய ஜனதா கட்சியின் ஜஸ்வந்த் சிங், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா போன்றவர்களும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான தினேஷ் சிங், பல்ராம் ஜாக்கர் போன்றவர்களும் இருந்தனர். இன்றைய நிலையில், இடதுசாரிகள், பாரதிய ஜனதா கட்சி, மாநிலக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் ஜெயலலிதாவுக்கு நேரிடையான தொடர்பு தொடர்கிறது.

 ÷ஆனால், 1999-க்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிடமிருந்து ஜெயலலிதாவும் அதிமுகவும் மிகவும் விலகிச் சென்றுவிட்டனர். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்கரெட் ஆல்வா, குலாம்நபி ஆசாத் போன்றவர்களின் உதவியுடன் காங்கிரஸýடன் கைகோர்த்து ஜெயலலிதாவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்றாலும், இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்புகொள்ள அதிமுகவுக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டது என்பதுதான் கசப்பான உண்மை. தமிழக காங்கிரஸிலும் சரி, வாழப்பாடி ராமமூர்த்தியைப்போல தனக்கு நெருக்கமான தலைவர்களே இல்லாமல் போய்விட்ட நிலைமை ஜெயலலிதாவுக்கு.

 ÷நாடாளுமன்றத்தில் இருக்கும் அதிமுக உறுப்பினர்களாகட்டும், ஒருவர்கூட சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும், பிரதமரிடமும், ஏன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம்கூட நட்பு ரீதியாகப் பழகும் அளவுக்கு மரியாதைக்குரிய தலைவர்களாக இல்லை. மக்களவையின் துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும், மூன்றுமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தும், தம்பிதுரையை காங்கிரஸ் தலைமை ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. அவரை ஜெயலலிதாவின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகப் பார்க்கிறார்களே தவிர, ஒரு தலைவராகவோ, அதிமுக தலைமையின் தூதுவராகவோ தில்லியில் யாரும் மதிப்பதில்லை. திமுக தரப்பில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கனிமொழி என்று காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கம் பாராட்டிப் பழகுவதுபோல தம்பிதுரையோ, டாக்டர் மைத்ரேயனோ ஒருநாளும் செயல்பட முடியாது என்பது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தெரியும்.

 ÷தில்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிடம் ஜெயலலிதாவுக்கு மறுபடியும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்க யாருமே இல்லாமல் இருக்கும் நிலையில், அஜீத் சிங்கின் நட்பு என்பது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய "ஜாக்பாட்'. கடந்த 30 ஆண்டுகளாக தில்லி அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் நெருக்கமானவர் என்பதுடன், மேற்கு உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஓர் அசைக்கமுடியாத சக்தியாகவும் விளங்குபவர் அஜீத் சிங்.

 ÷அஜீத் சிங்குக்கு சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் நெருக்கம் என்பது ஒருபுறம் இருக்க, அவரது மகன் ஜெயந்த் செüத்ரி, ராகுல் காந்தியிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவர். இந்தத் தொடர்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிர்பாராமல் வலியவந்த வரப்பிரசாதமாக மாறக்கூடும்.

 ÷"ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில் உச்ச நீதிமன்றம் மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு கமல்நாத் விவகாரத்தில் கண்டிப்புக் காட்டியதுபோல, ஆ.ராசா விவகாரத்திலும் அவரது இலாகா மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் உறுதியாக இருந்தால், திமுக அந்தக் கூட்டணியில் தொடருமா என்கிற பயம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கிறது.

 ÷ஜெயலலிதாவுடனான அஜீத் சிங்கின் சந்திப்பு இந்த பயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. திமுகவின் 18 எம்.பி.க்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டாலும், அதிமுக அணியின் 9 எம்.பி.களும் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்தின் 5 எம்.பி.களும் ஓரளவுக்கு அந்த இழப்பை ஈடுகட்டிவிடக்கூடும். ÷எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதோ இல்லையோ, இந்தச் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வர இருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தைரியமாக தனித்துப் போட்டியிடத் துணியும்.

 ÷1999-ல் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அதிமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டபோது திமுக ஆதரவுக் கரம் நீட்டியதுபோல, 2010-ல் திமுக இன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டால், அதிமுக ஆதரவுக்கரம் நீட்டாமலா போய்விடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com