மூலிகைகள் முக்கியத்துவம் பெறுமா?

வேதாரண்யம்: அரிய வகை மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூலிகைகள் முக்கியத்துவம் பெறுமா?

வேதாரண்யம்: அரிய வகை மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மைக் காலமாக பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இந்த நோய்களுக்கு அளிக்கப்படும் தடுப்பு முறை, சிகிச்சை குறித்த விவாதங்களும் ஏற்பட்டன.

இந்த நோய்களைத் தடுப்பதில் நிலவேம்பு மூலிகை சேர்க்கப்பட்ட சித்த மருத்துவ முறை நல்ல பயனை அளிப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், அண்மைக் காலமாக மூலிகை மருத்துவம் சார்ந்த கவனம் வெகுவாகக் குறைந்து வந்தது. இதற்குக் காரணம் போதிய பயிற்சி, விழிப்புணர்வு இல்லாமையே.

மருத்துவ முறைகளில் மிகவும் பழைமையானது தமிழ் மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவ முறையாகும். உலகிலுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபு வழி மருத்துவ முறைகளில் சிறப்புக்குரியது இது.

இந்நிலையில், சித்தர்களும், ஞானிகளும் காத்து வந்த இந்த மருத்துவ முறை குறித்த கவனமின்மையால், முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை வளங்கள் பயனற்று வீணாகின்றன.

உதாரணமாக, நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் காணப்படும் மூலிகை வளம் மண்ணோடு அழிகின்றன. மணல்பாங்கான நில அமைப்பைக் கொண்டுள்ள இந்தப் பகுதியில் மருத்துவ குணம் மிகுந்த அரிய வகை மூலிகைகள் தானாக வளர ஏதுவான இட அமைப்பு, தட்பவெப்ப நிலை உள்ளது.

இதனால் சாலையோரங்கள், நீர் நிலையோரங்கள், பனைமரக் காடுகள், மற்றும் இதர காடுகளில்  ஏராளமான மூலிகைகள் இயற்கையாகவே வளர்கின்றன.

இந்தப் பகுதியில் குப்பைமேனி, மஞ்சள்காமாலைக்கான கீழாநெல்லி, கடும் சளியையும் போக்கும் தூதுவளை, துளசி, ஆடாதொடை, சிறுகுறிஞ்சான், தும்பை, நாயுருவி, ஊமத்தை, மூக்குத்திப் பூண்டு, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, கையாந்தரை, பொடுதலை, ஆடுதின்னாப் பாளை, சோற்றுக் கற்றாழை உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான மூலிகைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக, மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் புதர்கள், காடுகளில் மூலிகைகள் அதிகமாக வளர்வது பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.

இதற்குச் சான்றாக அகத்தியம்பள்ளியில் உள்ள அகத்தியர் கோயிலும், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பள்ளிகொண்ட கோரக்க சித்தரின் பீடமும் விளங்குகின்றன.

வெப்ப மண்டல எல்லைக்கோட்டில் அமைந்துள்ள கோடியக்கரை வனப் பகுதியில் காணப்படும் அரிய மூலிகைகள், சோழர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சிறப்பு பெற்றதாக விளங்கியுள்ளன.

தற்போது வன உயிரினச் சரணாலயமாக இருக்கும் இவற்றின் ஒரு பகுதி 1993-ல் பெங்களூரில் உள்ள பாரம்பரிய மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி அறக்கட்டளை உதவியுடன் மூலிகை வனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இங்கு ஆவாரை, பூனைக்காலி, சங்கு புஷ்பம், குமுளை,உத்தாமணி, மிளகுச்சாரணை, சங்கலை உள்ளிட்ட 156 அரிய வகை மூலிகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மூலிகைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையால், அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இவற்றின் பயன்பாட்டுக்காக உள்ள திட்டங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளதால், அரிய வகை மூலிகைகள் வீணாகி அழிகின்றன.

இப்போது, மூலிகைகள் சேர்க்கப்பட்ட நுகர்பொருள்கள், மருந்துகளை (வெளிநாட்டுத் தயாரிப்புகளே அதிகம்) வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் ஒரளவு முன்னேற்றம் உள்ளது.

ஆனால், முறையான பயிற்சி,வழிகாட்டல் இல்லாததால் மூலிகைகளை நேரிடையாக உரிய முறையில் பயன்படுத்த முடிவதில்லை.

எனவே, அரிய மூலிகைகளின் சிறப்புகளை மக்களிடையே பரப்பவும், அவற்றைப் பயன்படுத்த முறையான வழிகாட்டுதலை ஏற்படுத்தவும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com