சிதிலமடையும் ஸ்ரீகல்யாணராமர் கோயில்

அரூர்: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கல்யாணராமர் கோயில் சிதிலமடைந்து வருகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை சீ
சிதிலமடையும் ஸ்ரீகல்யாணராமர் கோயில்
Updated on
2 min read

அரூர்: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கல்யாணராமர் கோயில் சிதிலமடைந்து வருகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 விஜயநகர பேரரசின் கடைசி மன்னன் சீலப்ப நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 39.43 ஏக்கரில் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. சீலப்ப நாயக்கர் கனவில் ராமர் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததால், இங்கு ஸ்ரீ கல்யாண ராமர் கோயில் கட்டப்பட்டதாகக் கோயில் தல வரலாறு கூறுகிறது.

 கோட்டையின் உள்பகுதியில் அரண்மனை, தானியக் களஞ்சியம், குதிரை லாயம், நீராடும்  குளக்கரை, எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் வகையிலான நுழைவாயில், அகழிகள், சுமார் 100 அடி உயரம் கொண்ட மண்ணால் கட்டப்பட்ட கோட்டை சுவர்கள், பீரங்கிகள் நிறுத்துவதற்கான சூரியமேடு, கற்களால் வடிமைக்கப்பட்ட குண்டுகள் உள்ளன.

 இக்கோட்டை வளாகத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன், அம்மன், முருகன் கோயில்கள் உள்ளன. கோயில் வளாகம் கலை நயத்துடன் பல்வேறு கற்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களை தட்டினால் மணி ஓசை வரும் வகையில் செதுக்கப்படிருப்பது தனிச்சிறப்பாகும்.

வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

 இப்போது இக்கோயிலில் வெள்ளி, சனிக்கிழமைகளில்தான் பூஜை நடைபெறுகிறது. கோட்டை வளாகம் முழுவதும் அடர்ந்த மரங்கள் இருப்பதால் கல்யாண ராமர், விநாயகர் கோயில்களைத் தவிர பிற கோயில்கள் பாராமரிக்கப்படவில்லை. அடர்ந்த மரங்கள், முள்புதர்கள் இருப்பதால் மற்ற கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.

 இந்தக் கோயில் வளாகத்தில் பக்தர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் குடிநீர், மண்டபம், தங்கும் வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இங்கு திருமண மண்டபம் ஏற்படுத்த வேண்டும், தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டம் தொடங்க வேண்டும், குடிநீர், அடிப்படை வசதிகளைச் செய்துத் தர வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகின்றனர்.

 கோயில் வளாகத்தில் சமூக விரோதச் செயல்கள்!

 இக்கோயில் வளாகத்தில் மது அருந்துதல், சீட்டு விளையாட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இக்கோயில் வளாகம், மன்னர் கால அரண்மனை, வரலாற்று சிற்பங்களைப் பாதுகாக்கும் வகையில் இரவுநேரத்தில் பாதுகாவலர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றும்  மொரப்பூர், பொம்மிடி ரயில் நிலையங்களில் இருந்து தென்கரைக்கோட்டை அமைந்துள்ள இடம் தொடர்பான வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.

 இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் கே.ரமேஷ் திங்கள்கிழமை கூறியது:

 இக்கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் 4 லட்சம் செலவில் கோயில் முன் தளம், பக்தர்கள் அமருவதற்கான தரை மேடை உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன. தற்போது கோட்டை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் 25 லட்சம் மதிப்பிலான பணிகள் குறித்து கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 13-வது நிதிக்குழுவின் நிதியில் இருந்து நிதியுதவி பெற்று, சீரமைப்புப் பணிகள் செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com