கோவை ரயில் நிலையத்தில் மூச்சுத் திணறும் பயணிகள்!

கோவை: கோவை ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தை அலங்கரிப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் சீரான காற்றோட்டத்தைத் தடுப்பதால் ரயில் நிலையத்துக்குள் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சென்னைக
கோவை ரயில் நிலையத்தில் மூச்சுத் திணறும் பயணிகள்!
Updated on
2 min read

கோவை: கோவை ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தை அலங்கரிப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் சீரான காற்றோட்டத்தைத் தடுப்பதால் ரயில் நிலையத்துக்குள் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறது கோவை ரயில் நிலையம். வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையத்தை தினசரி 30 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 10 பயணிகள் ரயில்களும் கடந்து செல்கின்றன. இதைத் தவிர, கோவையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் உள்ளன. இந்த ரயில்களில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். விழாக் காலங்களில் ரயில் நிலையத்துக்கு வரும் கூட்டம் பல மடங்காக அதிகரித்துவிடுகிறது.

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப ரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் அண்மையில் மேம்படுத்தப்பட்டன. கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தின் தோற்றத்துக்குப் புதுப்பொலிவு கொடுக்கும் வகையில் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. இந்தக் கண்ணாடிகளும், அழகு வேலைப்பாடுகளும் ரயில் நிலையத்தின் தோற்றத்துக்கு கம்பீரத்தை கொடுத்துள்ளன.

அதேநேரம், முகப்புத் தோற்றத்தை அலங்கரிக்கும் இந்தக் கண்ணாடிகளால் ரயில் நிலையத்துக்குள் வரும் காற்று முற்றிலும் தடுக்கப்படுவதால், கூட்ட நெரிசல் ஏற்படும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

கோவை ரயில் நிலையத்தின் தரைத்தளத்தில் முன்பதிவு இல்லா டிக்கெட் வழங்கும் மையமும், முதல் தளத்தில் முன்பதிவு டிக்கெட் வழங்கும் மையமும் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு மையங்களிலும் டிக்கெட் பெறுவதற்கு மதியம், இரவு நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும். அத்தகைய நேரத்தில் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கும்போது காற்றோட்டம் இல்லாததால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கிறது என்றும், போதுமான இயற்கை வெளிச்சம் பகல் நேரங்களில் கூட இருப்பதில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

"ரயில் நிலையத்தின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவற்றால் காற்றோட்டம் தடைபடுகிறது. இந்தக் அலங்காரக் கண்ணாடிகளை முழுமையாக திறக்கவும் முடிவதில்லை. இப் பிரச்னைக்குத் தீர்வு காண, அனைத்து மின்விசிறிகளையும் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. காற்றோட்டம் குறைவாக இருப்பதால் மின்விசிறிகளில் இருந்து வரும் காற்றும் மிக வெப்பமாக உள்ளது. இதன் காரணமாக, சிறிது நேரம் நிற்பதற்குக் கூட பயணிகள் அவதிப்படுகின்றனர்' என்கிறார் நாள்தோறும் திருப்பூருக்கு ரயிலில் செல்லும் வங்கி ஊழியர் நாகேந்திரன்.

"லட்சக்கணக்கில் செலவு செய்து முகப்புத் தோற்றத்தை ரயில்வே நிர்வாகம் மாற்றியது. இந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் ரயில் நிலையத்தின் காற்றோட்டம் பாதிக்கப்படக் கூடும் என்பதை ரயில்வே அதிகாரிகள் முன்கூட்டியே சிந்திக்கத் தவறிவிட்டனர். ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்ட அலங்காரக் கண்ணாடிகளில் காற்றோட்டத்துக்கான அமைப்புகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் கோவை, திருப்பூர் ரயில் பயணிகள் நலச் சங்க செயலர் மனோகரன்.

கோடைக்காலங்களில் ரயில் பயணிகளின் நெரிசல் பன்மடங்கு அதிகரிக்கும். அப்போது ரயில் நிலையத்தின் உள்ளே வெப்பக் காற்றின் அளவு அதிகரித்து பயணிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்க ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com