கருணாநிதி சொத்து கணக்கு இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை: ஜெயலலிதா

சென்னை, டிச. 3: முதல்வர் கருணாநிதி தனது சொத்துகணக்கை வெளியிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.   இது குறித்து வெள்ளிக்கிழமை அவர்
கருணாநிதி சொத்து கணக்கு இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை: ஜெயலலிதா

சென்னை, டிச. 3: முதல்வர் கருணாநிதி தனது சொத்துகணக்கை வெளியிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

  இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  முதல்வர் கருணாநிதி தனது சொத்து கணக்கை வெளியிட்டிருப்பதை இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை என்று சொல்லலாம். அவர் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்த வரலாற்றை வனவாசம் என்ற நூலின் முதல் பதிப்பில் கண்ணதாசன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்போது தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்ற புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

  16.1.1946-ல் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் சேர விண்ணப்பித்தபோது, தனக்கு நன்செய், புன்செய் நிலங்கள், வீட்டு மனைகள் எதுவும் இல்லை என்றும் நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ.1,000 இருக்கிறது என்றும் கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார்.

அவரது தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  கருணாநிதியும், கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்தபோது, சாப்பிட பணமில்லாத நிலை இருந்ததாக வனவாசம் நூலில் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

  1949-ம் ஆண்டே மாத ஊதியமாக ரூ.500 பெற்றதாகவும், மணமகள் திரைப்படத்துக்கு கதை வசனம் எழுத ரூ.10 ஆயிரமும், இருவர் உள்ளம் படத்துக்கு ரூ.20 ஆயிரம் பெற்றதாகவும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் அவர் எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகிறார், முதலில் தாக்கல் செய்தபோது அவரது ஆண்டு வருமானம் என்ன, அப்போது கட்டிய வருமான வரி எவ்வளவு, ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு, என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  மற்ற மாநில முதல்வர்களைவிட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் அவர் கூறி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா, மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா, சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை, கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரமாண்டமான மாளிகை,  தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள், தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ், மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்  வர்த்தக கட்டடங்கள், பொறியியல் கல்லூரி, மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

  பேரன்கள், பேத்திகள் உள்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும், ஏராளமான அசையா சொத்துகளும் உள்ளன.  அவரது குடும்பத்தினர் திரைப்படத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களை கருணாநிதி குடும்பத்தினர் வளைத்து போட்டுள்ளனர்.

கோபாலபுரம் வீட்டின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ.300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா, ராசாத்தி அம்மாள் தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

  ரூ.600 கோடியை செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக தயாளு அம்மாள் பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன. பேரனிடமே ரூ.600 கோடி பெற்றார் என்றால் மற்றவர்களிடமிருந்து எவ்வளவு பெறப்பட்டதோ?

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், அமைச்சர் பதவிகளையும், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் கருணாநிதி விற்கிறார் என்பது இந்த உரையாடல் பதிவின் மூலம் தெரிகிறது.

  2005 அக்டோபரில் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ.100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ.22 கோடி அளவுக்கு வருமான வரி கட்டியதாகவும் கூறியிருக்கிறார். 2007 இறுதியில், முழு தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக செய்தி வெளியானது. அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே, ஒரு வேளை அந்தப் பணம் சுவிஸ் வங்கிக்கு சென்றுவிட்டது போலும்.

  தமிழக அரசின் பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிக வருமானம் வரும் அளவுக்கு குடும்ப பட்ஜெட்டை போடக்கூடியவர் கருணாநிதி. இதனால்தான், தி நியூ யார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் போன்ற அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வரும் அளவுக்கு ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பமாக அவரது குடும்பம் உள்ளது. இந்தியாவிலேயே இதுவரை ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சிதான். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

  இப்படி ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் அப்படி கூறி இருக்கிறார் போலும்.

  கருணாநிதியை, ஊழலின் ஊற்றுக்கண் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com