

சென்னை, ஜூலை 1: எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு அழைப்பு வந்தும்கூட, இடம் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு, ஜூலை 21-க்குப் பிறகு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஏற்கெனவே மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
மொத்தம் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சென்னையில் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் நான்கு தினங்களாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
கலந்தாய்வு தொடங்கி முதல் நான்கு தினங்களில், அதாவது வியாழக்கிழமை வரை அனைத்து வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய நான்கு பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
13 பேர்தான் வரவில்லை: பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 1) கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 56 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் 307 மாணவர்களும் என மொத்தம் 363 பேர் கலந்தாய்வுக்கு
அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 12 மாணவர்கள் என மொத்தம் 13 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
காத்திருப்போர் பட்டியலில்...: பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு 47 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 260 இடங்களும் மட்டுமே இருந்ததால், கலந்தாய்வுக்கு வந்த அனைவருக்கும் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கொடுக்க முடியவில்லை.
எனவே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோரில் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் 7 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் 31 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ÷காத்திருப்போர் பட்டியலில் கூடுதலாக இடம்பெற்றுள்ள இந்த 38 பேரிடமும் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடரும் காத்திருப்பு...: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு புதன்கிழமை (ஜூன் 30) நடந்த கலந்தாய்வின்போது, 70 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றனர். இதைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்குமா என காத்திருப்போரின் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது.
÷பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 194.50; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 194.00 ஆகும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு...சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்), பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க, கடைசி நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 2) கலந்தாய்வு நடைபெறுகிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 200 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு 224 மாணவர்களும், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு உரிய 38 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு 50 மாணவர்களும், பழங்குடி வகுப்பினருக்கு உரிய 14 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு 18 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 252 காலியிடங்களுக்கு, 280 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதால், காத்திருப்போர் பட்டியல் வெள்ளிக்கிழமையும் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.