திமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு

சென்னை, மே 30: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் கே.பி. ராமலிங்கம் திமுக விவசாய அணிச் செயலாளராக இப்போது உள்ளார். ச. தங்கவேலு முன்னாள் அமைச்சராக இருந்தவர். டி.என். செல்வகணபதி அதிமுக

சென்னை, மே 30: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் கே.பி. ராமலிங்கம் திமுக விவசாய அணிச் செயலாளராக இப்போது உள்ளார். ச. தங்கவேலு முன்னாள் அமைச்சராக இருந்தவர். டி.என். செல்வகணபதி அதிமுக-விலிருந்து வெளியேறி திமுக-வில் இணைந்தவர்.

ச.தங்கவேலு: சங்கரன்கோவிலைச் சேர்ந்த ச. தங்கவேலு, அரசு வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக 1984-ல் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். எனினும் 1989-ல் மீண்டும் போட்டியிட்டு வென்று, கைத்தறி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

  பிறகு திமுக சார்பில் 1991,1996-ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2001 தேர்தலில் மீண்டும் ச.தங்கவேலுக்கு திமுகவில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் அப்போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இருந்ததால்,சங்கரன்கோவில் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 2006-ல் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

   இது தவிர 1996ல் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 நகர்மன்றத் தேர்தலிலும் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதன்பிறகு சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி (பெண்) பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

   தற்போது திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஆதிதிராவிடநலக் குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

டாக்டர் கே.பி.ராமலிங்கம் (56):

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த காளிப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பக் கவுண்டர் மகன். மாணவப் பருவத்தில் இருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்தவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டம் (பிவிஎஸ்சி) பெற்றவர்.

÷அதிமுக சார்பில் 1980-ல் ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். 1984-ல் இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணிக்குச் சென்று, பின்னர் 1990-ல் திமுக-வில் இணைந்தார்.

1991-ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1996-ல் இதே தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ல் மீண்டும் ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

÷2009-ல் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் நலவாரியத் தலைவராக பதவியேற்று தொடர்ந்து வருகிறார். திமுக-வில் மாநில விவசாய அணிச் செயலராக பதவி வகிக்கிறார். இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன் அதியமான், மகள் சிந்தாமணி ஆகியோர் உள்ளனர்.

டி.எம். செல்வகணபதி : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு இவரது சொந்த ஊர்.  எம்.ஏ., எல்.எல்.பி. முடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுக ஆதரவாளர். 1991 பேரவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். 1999 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றி பெற்று 1999-2004 வரை எம்.பி.யாக இருந்தார்.

÷பின்னர் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த அவர், 2008-ல் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவில் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலராக உள்ளார். 2009 மக்களவைத் தேர்தலின்போதே, சேலம் தொகுதி அவருக்குத் தரப்படலாம் என்ற பேச்சு இருந்தது. கூட்டணிப் பகிர்வில் சேலம் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

÷மக்களவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. தருமபுரி தொகுதியில் செல்வாக்கு மிகுந்த பாமகவை தோற்கடித்து திமுகவை வெற்றி பெறச் செய்ததில் செல்வகணபதிக்கு முக்கியப் பங்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com