புதிய தலைமைச் செயலர் மாலதி

சென்னை, ஆக. 31: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப
புதிய தலைமைச் செயலர் மாலதி

சென்னை, ஆக. 31: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.

தஞ்சையைச் சேர்ந்தவர்: 1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி. தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார். தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்.

எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார். திருச்சியில் உதவி ஆட்சியராக  (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.

அடுத்தடுத்த ஆண்டில் துணை ஆட்சியராகவும், நிதி மற்றும் பொதுத் துறைகளில் சார்பு மற்றும் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 1987-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.

1992-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராகவும், அதற்கடுத்த ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 1996-ம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்தார்.

2001-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு ஆணையராகப் பணியாற்றினார்.

தலைமைச் செயலாளராக...2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் உள்துறைச் செயலாளர் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். இதன்பின், தலைமைச் செயலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் லட்சுமி பிரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்தார். அவருக்குப் பிறகு இரண்டாவது பெண் தலைமைச் செயலாளார் என்ற பெருமையை மாலதி பெற்றுள்ளார்.

ஸ்ரீபதி ஓய்வு: 2008 செப்டம்பர் 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கே.எஸ். ஸ்ரீபதி. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசின் பெரு முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கூட்டுப் பணியில் நானும் ஈடுபட்டது தலைமைச் செயலாளராக நான் இருந்த காலத்தில் சாதனையாகக் கருதுகிறேன் என்றார் கே.எஸ்.ஸ்ரீபதி.

மாநில தகவல் ஆணையர்? தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், மாநில தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதற்கான உத்தரவை ஆளுநர் பர்னாலா விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநில தகவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். பதவி நீட்டிப்பு காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே ஸ்ரீபதி ஓய்வு பெற்றுள்ளதால், மாநில தகவல் ஆணையர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

டிஜிபி, தலைமைச் செயலராக பெண்கள்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர். அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com