மின் வாரிய நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மின் வாரிய அலுவலர்களின் நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.  வேதாரண்யம் பகுதியில் மல்லிகை, தர்பூசணி, காய்கறி உள்ளிட்ட
மின் வாரிய நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்பு
Updated on
2 min read

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மின் வாரிய அலுவலர்களின் நடவடிக்கையால் தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

 வேதாரண்யம் பகுதியில் மல்லிகை, தர்பூசணி, காய்கறி உள்ளிட்ட பலவகை தோட்டக் கலைப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள கடலோரக் கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை முக்கிய சாகுபடியாக புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

 2001-ம் ஆண்டில் அரசால் கொண்டு வரப்பட்ட புகையிலை தடைச் சட்டம், உற்பத்திச் செலவினம் அதிகரிப்பு, உற்பத்தியாளர்களிடையே ஏற்பட்ட புகையிலை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அதன் உற்பத்தி பரப்பு வெகுவாகக் குறைந்தது.

 இதனால், ஆண்டுக்கு 150 நாள்கள் முழுநேர வேலைவாய்ப்பைப் பெற்று வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர்.

 அதே காலகட்டத்தில், புகையிலை சாகுபடி கைவிடப்பட்ட நிலப் பரப்பின் ஒரு பகுதியில் மாற்றுப் பயிராக மேற்கொள்ளப்பட்ட மல்லிகைப் பூ சாகுபடியை விவசாயிகள் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றனர்.

 பலர் தங்களது வீட்டுமனை சார்ந்துள்ள குறைந்த அளவு இடத்திலும் 10, 15 செடிகளை வைத்துப் பராமரிக்கின்றனர். இது பெரும்பான்மையான குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

 புகையிலை சாகுபடியின் போது, தோட்டப் பகுதிக்குள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்த செங்கல் கிணறுகளே பாசனத்துக்கான முக்கிய நீராதாரமாக உள்ளது. முன்பு ஆள் ஏற்றம், கை ஏற்றம் மூலம் பாசன வசதி செய்யப்பட்டது. தற்போது, மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 இதேபோல, இங்கு குடிசைத் தொழில்போல அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி உள்ளிட்ட சாகுபடிக்கும் மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 இந்த வகை பயன்பாட்டுக்கு சுமார் அரை முதல் ஒன்றரை குதிரைத் திறனுடைய மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளில் இயக்கப்படுவதும், அதற்காக அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதும்தான் தற்போதைய பிரச்னைக்கு காரணம்.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை தோட்டக்கலைப் பயிர் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து கருப்பம்புலம் விவசாயி வி.ஆர்.கே. ரவி தெரிவித்தது:

 மின் வாரிய பறக்கும் படையினர் திடீரென சோதனை செய்து, பல ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். வீட்டு இணைப்பிலிருந்து மல்லிகை சாகுபடிக்கு மின்சாரம் எடுக்கக் கூடாது என இதற்கு முன்பு எந்த அரசும் நிர்பந்திக்கவில்லை. எங்களுக்கும் அதுகுறித்து (விவசாயிகள்) தெரியாது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மல்லிகைப் பூக்களை அனுப்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்போதும் காய்கறிகளை அனுப்ப இந்த வசதிகள் தொடர்கின்றன.

 தனி மின் இணைப்பு பெற்று பாசனம் செய்யும் அளவுக்கு அதிகமான சாகுபடிப் பரப்போ, பண வசதியோ சிறு விவசாயிகளிடத்தில் இல்லை. வீட்டு மின் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது தோட்டக்கலைப் பயிர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கவோ அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர்.

 இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய அலுவலர் ஒருவர் கூறியது:

 பயன்பாட்டைப் பொருத்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 1-ஏ வகை வீட்டுக்கான இணைப்பில் குடிநீர், கழிப்பறை, குளியலறை போன்ற பயன்பாட்டுக்கு மோட்டார் பயன்படுத்தலாம். தோட்டங்கள் உள்ளிட்ட பல்நோக்கு பயன்பாட்டுக்கு மின் மோட்டாரை பயன்படுத்தக் கூடாது.

 இது ஏற்கெனவே உள்ள விதிதான். மல்லிகை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பயன்பாட்டுக்கு ரூ. 1600 கட்டி தனி இணைப்பு பெற வேண்டும் என்றார்.

 எனவே, வேதாரண்யம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள மல்லிகை உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், இதற்கான மாற்றுத் திட்டத்தையும், வழிமுறைகளையும் அரசு உருவாக்கவும், அதுவரை கடுமையான நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவும் வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com