ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஆட்சியர்களை இடம் மாற்ற தேர்தல் ஆணையம் தடை

சென்னை, டிச. 17: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையும் வரை, மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ஜனவரி 5-ம் தேதிக்க

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:14 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, டிச. 17: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவடையும் வரை, மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ஜனவரி 5-ம் தேதிக்குப் பிறகே மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பெரும்பாலான மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆட்சியர்களாக இருந்த பலர், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த மாதம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது.

மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரச்னைகளைக் கையாள போதிய முயற்சிகளை எடுக்காத ஆட்சியர்களையும் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட ஆட்சியர்கள் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்கான கோப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

மாற்றத்துக்குத் தடை: கடந்த 10 நாள்களுக்கும் மேலாகவே, மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்கும் என தலைமைச் செயலகத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்போதைக்கு அத்தகைய மாற்றங்கள் ஏதும் நடைபெறாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது: வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 5-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகளை மாவட்டந்தோறும் தேர்தல் அதிகாரிகளாக இருந்து ஆட்சியர்களே செய்து வருகின்றனர். பணியில் இருக்கும்

ஆட்சியர்களை மாற்றம் செய்து புதிய ஆட்சியர்களை நியமிக்கும்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளில் தொய்வு ஏற்படும். எனவே, ஜனவரி 5-ம் தேதி வரை அதாவது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை, மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவின்படி இப்போதைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்காது. புத்தாண்டுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சியர்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்கள் தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணியிட மாற்றம் வரும் என்பதை எதிர்பார்த்தே காத்திருக்கின்றனர்.

தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அணைப் பிரச்னை, அணுமின் நிலையப் பிரச்னை என பல்வேறு பிரச்னைகள் உருவெடுத்துள்ள நிலையில், மாவட்டப் பணிகளைவிட தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளர் நிலையிலான பணியே பாதுகாப்பானது என பல்வேறு ஆட்சியர்களும் நினைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், ஆட்சியாளர்கள் மாற்றம் நிகழ குறைந்தபட்சம் 20 நாள்களாகும் என்பதே அரசு வட்டாரங்களின் தகவலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.