மழை நீர் வீணாவதைத் தடுக்க ஆப்பக்கண்ணி பாலம் மேம்படுத்தப்படுமா?

மழை நீர் வீணாவதைத் தடுக்க ஆப்பக்கண்ணி பாலம் மேம்படுத்தப்படுமா?

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஏரியில் தேங்கும் மழை நீர் முழுவதும் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்பக்கண்ணி பாலத்தை மதகுகளுடன் மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஏரியில் தேங்கும் மழை நீர் முழுவதும் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்க, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்பக்கண்ணி பாலத்தை மதகுகளுடன் மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தில் 49 ஹெக்டேர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது கொல்லப்புலம் ஏரி. வடகிழக்குப் பருவ மழை காலத்தில் இந்த ஏரியில் தேங்கும் மழை நீரையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புறப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல் சாகுபடி, கால்நடை வளர்ப்புத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், ஏரியின் வடிகால் பகுதியில் உரிய கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால், மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருவதுடன், குறுகிய காலத்துக்குள் ஏரி வறண்டு விடுவதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

கொல்லப்புலம் ஏரியிலிருந்து செல்லும் ஆப்பக்கண்ணி வடிகால் வாய்க்கால், கடலுக்குச் செல்லும் முக்கிய வடிகாலாக உள்ள மானங்கொண்டான் ஆற்றுடன் இணையும் அமைப்பை பெற்றுள்ளது.

ஆப்பக்கண்ணி வாய்க்கால் குறுக்கே செல்லும் கோடியக்கரை - தஞ்சை நெடுஞ்சாலையில் இருந்த குழாய்ப் பாலத்தை மதகு பாலமாக மாற்றியமைத்து குறிப்பிட்ட காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இந்நிலையில், 2008-ம் ஆண்டு நபார்டு மூலம் ரூ. 1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்காக கட்டப்பட்ட ஆப்பக்கண்ணி புதிய பாலம் கடந்த ஓராண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தை கட்டும்போதே தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில், மதகுகளை பொருத்த ஏதுவான கட்டமைப்புடன் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசை வலியுறுத்தினர்.

இந்த இடத்துக்கு அருகே மானங்கொண்டான் ஆறு கடலில் இணையும் பகுதியான ஆதனூரில் உள்ள கடைமடை ரெகுலேட்டர், பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால், இந்த வடிகாலுடன் இணைந்துள்ள ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர், தகட்டூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், பெருக்கெடுத்து, குறிப்பிட்ட அளவு வடிந்த பின்னர், சீரான நிலையையடையும் தண்ணீரை தேக்க முடியாமல் அது வீணாகி கடலில் கலக்கிறது. மேலும், ஏப்ரல், மே மாதங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆப்பக்கண்ணியில் மதகு அமைக்க வலியுறுத்தும் குழுவின் செயலர் ஆர்.எம். ரங்கராஜன் கூறியது:

ஆப்பக்கண்ணியில் புதிய பாலத்துக்கான அடித்தளம் (கான்கிரீட்) அமைக்கும் போதே நீர் ஒழுங்கி எனப்படும் ரெகுலேட்டரை அமைக்க ஏதுவான வழிவகை செய்து பின்னர், சிறப்பு திட்டங்கள் மூலம் மதகுகள் பொருத்தப்படும் என அரசு தரப்பில் கூறினார்கள் (செயற்பொறியாளர்,பொதுப் பணித் துறை வெண்ணாறு கோட்டம், திருவாரூர் ந.க.453 நாள் 4.9.2008) ஆனால், அதுபோல ஏதும் அமைக்கப்படவில்லை.

அதேபோல, ஆதனூர் நீர் ஒழுங்கி கதவுகள் தகரத்தில் போடப்பட்டதால், சிறிது காலத்திலேயே வீணாகி விட்டன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

எனவே, இந்தப் பகுதியின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நீராதாரங்களை பாதுகாக்க ஆப்பக்கண்ணி பாலத்தை மதகுகளுடன் மேம்படுத்தவும், பழுதடைந்துள்ள ஆதனூர் நீர் ஒழுங்கியை மாற்றியமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com