அணையில் தண்ணீர் இருந்தும் பயிர்கள் கருகும் அவலம்

திருநெல்வேலி, பிப்.14: திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சிப் பகுதியான ராதாபுரம் வட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சுமார் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட நன்செய் மற்றும் தோட்டப் பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அணையில் தண்ணீர் இருந்தும் பயிர்கள் கருகும் அவலம்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி, பிப்.14: திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சிப் பகுதியான ராதாபுரம் வட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சுமார் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட நன்செய் மற்றும் தோட்டப் பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு தண்ணீர் அளிக்க வேண்டிய கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும் பாசனக் கால்வாயில் உடைப்பு ஏற்படுவதாகக் கூறி தண்ணீர் மறுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

கோதையாறு குறுக்கே 1906-ல் கட்டப்பட்டது பேச்சிப்பாறை அணை. முதலில் 42 அடி உயரத்துக்கு அணை கட்டப்பட்டது. வறண்ட பூமியான ராதாபுரம் வட்டத்துக்கு இந்த அணையில் இருந்து தண்ணீர் கொடுத்தால் அப்பகுதி வளம் பெறும் எனக் கருதினார் காமராஜர்.

இதையடுத்து அணையின் உயரத்தை 48 அடியாக உயர்த்தும் திட்டத்துக்கு 1963-ல் அடிக்கல் நாட்டினார் அப்போது முதல்வராக இருந்த அவர்.

கட்டுமானப் பணி 1970-ல் முடிவுற்றது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு நிலப்பாறை அருகே பிரியும் ராதாபுரம் கால்வாய் மூலம் கருங்குளம், பழவூர், ஆவரைக்குளம், அழகனேரி, கோலியன்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரபுரம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 52 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் கால்வாயும் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய் மூலம் சுமார் 1,012 ஏக்கர் நன்செய் நிலமும், சுமார் 16 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலமும் பயன்பெறும் என கணக்கிடப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இந்த கால்வாய் மூலம் பயன் ஏற்பட்டு வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ராதாபுரம் வட்டத்தில் உள்ள 52 குளங்களுக்கும் பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து முறையாக தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை என்பது விவசாயிகளின் புகார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 ஆகிய நான்கு அணைகளிலும் 1,300 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தால் ராதாபுரம் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 16-ல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என அரசு முதலில் ஆணையிட்டு இருந்தது.

ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாத நிலையில் ஆண்டுதோறும் அரசாணை பெற்று ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து 162 மில்லியன் கன அடி தண்ணீர் ராதாபுரம் கால்வாயில் திறந்துவிடப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் இதுவரையில் முறையாகத் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், குளங்கள் எதுவும் நிரம்பவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகமான மழை பெய்தது. இயல்பான மழை அளவான 1,443 மி.மீ.யும் விஞ்சி 1954 மி.மீ. மழை பெய்துள்ளது. எனவே, ராதாபுரம் கால்வாயில் போதுமான அளவுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்து நன்செய் நிலங்களிலும், கிணற்றுப் பாசன உதவியுடன் புன்செய் நிலங்களிலும் பிசானப் பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால் கால்வாயில் போதுமான அளவு தண்ணீர் திறந்துவிடப்படாததால் குளத்துப் பாசனப் பகுதிகளும், கிணற்றுப் பாசனப் பகுதிகளிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

நக்கனேரி, புல்லனேரி, ஆலடிகுறிச்சி, கோலியன்குளம், சிவசுப்பிரமணியபுரம், அடங்கார்குளம் ஆகியவை வறண்டு விட்டதால் அந்தப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர்

நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் கிணற்றுப் பாசனப் பகுதிகளில் வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, உடனடியாக கால்வாயில் போதுமான அளவு தண்ணீர் திறக்காவிட்டால் மொத்தத்தில் சுமார் 1,000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.

""ராதாபுரம் கால்வாய்க்கு இந்த ஆண்டு 162 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டிருந்தாலும், இதுவரையில் சுமார் 250 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  

இப்போதும் 70 முதல் 80 கன அடி தண்ணீர் சென்று கொண்டுதான் இருக்கிறது. தோவாளை கால்வாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் ராதாபுரம் கால்வாயில் அதிகமான தண்ணீரை திறந்துவிட முடியவில்லை'' என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

இதனிடையே, "நபார்டு' திட்டத்தில் தோவாளை கால்வாயைச் சீரமைக்க ரூ. 20.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.

""ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறக்க கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் நினைத்தால் எங்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடியும்.

அனைத்து குளங்களும் நிரம்பும். கால்வாய் உடைவதாக கூறுவதை ஏற்க முடியாது. கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடந்த 2 மாதங்களாக போராடி வருகிறோம். இதுவரையில் தீர்வு ஏற்படவில்லை. தேர்தல் நேரத்தில் இந்தப் பகுதியில் இது ஒரு பெரும் பிரச்னையாக எதிரொலிக்கும் என அஞ்சுகிறோம்.

எனவே, தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்'' என்றார் ராதாபுரம் கால்வாய் நீர்ப்பாசன சங்கத் தலைவரும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருமான (திமுக) எஸ். இளங்கோ கலைசிகாமணி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பு பருவ நெற்பயிர் அறுவடைக்குத் தயாராகி விட்டன. மாவட்டத்தில் உள்ள நான்கு அணைகளிலும் இப்போது சுமார் 5,600 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

உபரிநீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. ஆனால், அண்டை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் வட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com