

வேதாரண்யம் : ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பின்னர் முடக்கமடைந்து, ரயில் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ளது அகஸ்தியம்பள்ளி. இங்கு திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாகச் செல்லும் 66 கி.மீ. தொலைவு ரயில் பாதை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்த இருப்புப் பாதையில் காலை, பிற்பகல், இரவு என மூன்று வேளைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை மூலம் கோடியக்கரை பறவைகள் சரணாலயம், சதுப்பு நிலக் காடுகள் உள்ளிட்டவற்றைக் காண வந்துச் சென்ற வெளிநாட்டவர் மட்டுமல்லாது, சுற்றுலாப் பயணிகளுக்கும் இது பயனளித்து வந்தது. இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த சரக்கு ரயில்கள் மூலம் வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு போன்ற பொருள்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்க ஏதுவாக அமைந்தது.
காலப்போக்கில் இந்த வழித்தடம் முடக்கமடைந்து, 1990-களில் பயணிகள் ரயில் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 1993-ல் பெரும்பாலான குறுகிய (மீட்டர் கேஜ்) ரயில் பாதைகள் அகலப் பாதையாக மாற்றியமைக்கப்பட்டன. இதனால், குறுகிய பாதையான இந்தத் தடத்தில் சரக்கு ரயில் இயக்கமும் நின்றுபோனது.
பின்னர், 1999-ம் ஆண்டு முதல் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வரையில் ரயில் பஸ் இயக்கப்பட்டது. அது இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பேருந்து போன்று நின்று செல்லும் அமைப்பைப் பெற்றிருந்தது.
2004-ம் ஆண்டு, டிச. 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதல் நாளன்று காலையுடன் இந்தப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
அகலப் பாதைத் திட்டம்: 1930-ல் வேதாரண்யத்தில் (அகஸ்தியம்பள்ளி) நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. பெருமைக்குரிய இந்தப் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாதையில், ரயில் இயக்கம் கேள்விக்குறியாகிவிட்டது. அகலப் பாதையாக மாற்றியமைத்து பயணிகள், சரக்கு ரயில்களை இயக்க பல்வேறு அமைப்புகள், உப்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அகலப் பாதையாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், போதிய நிதி ஓதுக்கீடு இல்லாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கோரிக்கை முதன்மைப்படுத்தப்பட்டது. அப்போது பிரசாரத்துக்கு வந்த எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் இதற்கான உறுதியை அளித்தனர்.
அதேபோல, கடந்த காலங்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பதும், அதை நினைவு கூரும் வகையில் உப்பு முடிச்சுகளை அளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த முறை உப்பு சத்தியாகிரக விழாவுக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதை வலியுறுத்தி புதுதில்லியில் உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி கேட்கப்பட்டது.
அண்மையில் இங்கு வந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் ரயில்வே அமைச்சருக்கான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கைகள் கேள்விகுறியாகவே உள்ளன.
வேதாரண்யம் அருகேயுள்ள வேளாங்கண்ணி, திருக்குவளை பகுதிகளுக்கு புதிய ரயில் பாதைகள் அமைத்தது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு அமைக்கப்பட்ட பாதையை மேம்படுத்துவதில் காலதாமதம் நீடிப்பது வேதனையளிக்கிறது.
இதுகுறித்து தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர் பெ.சிவசுப்பிரமணியன் கூறியது: அகலப் பாதைத் திட்டத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கிவிட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
ரயில் இயக்கம் நிறுத்தப்பட்ட நீடாமங்கலம் - மன்னார்குடி தடத்திலும், மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய தடத்திலும் பணிகள் தொடங்கி உள்ளதைப் போல, இந்தப் பாதையிலும் பணிகள் தொடங்க வேண்டும். இதனால், மக்களும் பயனடைவர், உப்பு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்பு உருவாகும் என்றார் அவர்.
எனவே, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையை அகலப் பாதையாக்கி மீண்டும் ரயில்கள் இயக்க இந்த நிதியாண்டிலாவது நிதி ஒதுக்கீடு பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.