தீவன விலையேற்றம்: அடிமாட்டு விலைக்கு கால்நடைகளை விற்கும் விவசாயிகள்!

தருமபுரி : தீவன விலையேற்றம், கட்டுப்படியாகாத பால் விலை ஆகியவற்றால் தருமபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில்
தீவன விலையேற்றம்: அடிமாட்டு விலைக்கு கால்நடைகளை விற்கும் விவசாயிகள்!
Updated on
1 min read

தருமபுரி : தீவன விலையேற்றம், கட்டுப்படியாகாத பால் விலை ஆகியவற்றால் தருமபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தாலும், தருமபுரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைவுதான். இங்கு 8 அணைகள் இருந்தாலும், 3 அணைகள் மட்டுமே நிரம்பின. கோடை காலம் நெருங்கும் நிலையில் இப்போதே பூதநத்தம், தண்டுக்காரநத்தம் உள்ளிட்ட சில இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

 பிற பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் கால்நடைகளை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் சிலர் தங்களது கால்நடைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, எஞ்சியவற்றை சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் வாரச் சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது.

"புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை அதிகரித்துவிட்டதாலும், பாலுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காததாலும் பசு, எருமை மாடுகளின் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம்.

கால்நடைகளை வைத்திருப்பதால் வேறுவேலைக்குச் சென்று குடும்ப வருவாயைப் பெருக்க முடியவில்லை. எனவே, அவற்றை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் விவசாயிகள்.

"கால்நடைகளுக்குத் தேவையான புல் குறைந்துவிட்டதால் தீவனம் கிடைப்பதில்லை. மாட்டுத் தீவன மூட்டை ரூ.850 (50 கிலோ), வைக்கோல் ஒரு டிராக்டர் ரூ.7,000, பருத்திக்கொட்டை கிலோவுக்கு ரூ.15-க்கும் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதவிர பால் மாடுகளுக்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

ஒரு வீட்டில் 3 மாடுகள் வளர்த்தால் மாதம் ரூ.1,500 செலவாகிறது. ஆனால், பாலை விற்பனை செய்தால் ரூ.1,000-ம் தான் கிடைக்கிறது. இதனால் கால்நடைகளின் எண்ணிக்கையை விவசாயிகள் குறைத்து வருகின்றனர்' என்று எஸ்.சின்னராஜும், சங்கிலிவாடி எஸ்.கே.கோவிந்தனும் தெரிவித்தனர்.

 "வாரச்சந்தைகளில் ஒருகாலத்தில் எருமைகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது பசுமாடு மற்றும் காளைகளையும் விவசாயிகள் விற்க தொடங்கவிட்டனர்.

இதை தடுத்து நிறுத்த கால்நடை பராமரிப்புத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விலையை உடனடியாக உயர்த்துவதுடன், கால்நடை தீவனங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com