

வேதாரண்யம்: தலைஞாயிறு பகுதியில் வீணாகும் மழை நீரைச் சேமிக்கவும், கடல் நீர் ஊருக்குள் உள்புகுவதைத் தடுக்கவும் அரிச்சந்திரா நதியின் குறுக்கே நிரந்தர நீர்த்தேக்கி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள தலைஞாயிறு பகுதி வழியாக வங்கக் கடலில் இணைகிறது அரிச்சந்திரா நதி. இது டெல்டா பகுதியிலிருந்து செல்லும் வெண்ணாறு வடிகால் கோட்டத்தின் முக்கிய வடிகால் ஆறாக உள்ளது.
தலைஞாயிறு பகுதியில் உள்ள பிரிஞ்சுமூலை என்ற இடத்தில் கடைக் கோடியாக அமைந்துள்ள நீர்த்தேக்கி வரை பாசனத்துக்கு தண்ணீர் அளித்த பிறகு, வடிகாலாக மாறி வேதாரண்யம் கால்வாய் வழியாக கடலில் இணைகிறது.
வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் போது அரிச்சந்திரா ஆற்றின் வழியாக கணிசமான அளவில் வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீரைச் சேமிக்க ஏற்ற சூழலை இயற்கையாகவே இந்தப் பகுதி பெற்றுள்ள போதிலும், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் அவை வீணாகி வருகின்றன.
நீர் நிலைகளில் விரைவாக தண்ணீர் வறண்டு போவதாலும், கால்வாய் சார்ந்த நிலப் பகுதி உப்பு நீர் வளர்ப்பு இறால் பண்ணைகளாக மாறிவிட்டதும் நில வளம், நீர் வளத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது.
அத்துடன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடல் நீர்மட்டம் உயரும் நேரங்களில் உப்பு நீரானது அரிச்சந்திரா நதி வழியாக 7 கி.மீ. கடந்து, பிரிஞ்சுமூலை நீர்த்தேக்கிவரை செல்லும் அமைப்பைப் பெற்றுள்ளது. அவ்வாறு உப்பு நீர் உள்புகுவதால் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களில் உள்ள தண்ணீர் உப்பு நீராக மாறிவிடுவதுடன், ஆற்று நீரை நம்பியுள்ள கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படுகிறது.
உப்பு நீரைத் தடுக்க அரிச்சந்திரா நதியின் குறுக்கே முதலியப்பன் கண்டி என்ற இடத்தில் ஆண்டுதோறும் தாற்காலிக மண்கவனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை முன்னர் விவசாயிகளே மேற்கொண்டு வந்தனர். நடைமுறை பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக பொதுப் பணித் துறை உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு செய்தும், பல நேரங்களில் சில காரணங்களால் பணிகள் பயனளிக்காமல் போய்விடுகின்றன. இதனால், நிரந்தரமான நீர்த்தேக்கி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். ஆனால், அரசு எடுக்கும் நடவடிக்கைகள் செயலாக்கம் பெறுவதில்லை.
குறிப்பாக, 2002 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மனுக்கள் குழு மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ரூ. 45 லட்சம் தோராயமான மதிப்பீடு செய்யப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மதிப்பீடு தயாரித்து, கருத்துருவுடன் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும், இதுவரையில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், அரிச்சந்திரா நதியின் இடது கரைப் பகுதியில் உள்ளது முதலியப்பன்கண்டி கிராமம். இதை மற்ற பகுதியுடன் இணைக்கும், மக்களின் போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்த ஒரே பாலமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிந்து விழுந்தது. தற்போது தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை நம்பியுள்ள மக்கள் வெள்ளக் காலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிரந்தரமான பாலமும் கட்டப்படவில்லை.
இதுகுறித்து தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோமு. இளங்கோ கூறியது:
ஆண்டுதோறும் மண்கவனை அமைக்கிறோம். முதலியப்பன்கண்டியில் நிரந்தரமான நீர்த்தேக்கியை கிராமத்தினரின் போக்குவரத்துக்கும் பயன்படும் வகையில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், மழைக் காலங்களில் வீணாகும் மழை நீரைச் சேமிக்கவும், கோடைக்காலத்தில் கடல் நீர் ஊருக்குள் உள்புகுவதைத் தடுக்கவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
அவரது கருத்தையே வலியுறுத்தும் இந்தப் பகுதி மக்கள், திட்டம் நிறைவேறுவது எப்போது என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.