

சிதம்பரம்: உயிரியல் தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாரம்பரிய இனப்பெருக்கு முயற்சிகளுக்கு மாற்றாக ஒரு திசுவை (பண்ள்ள்ன்ங்) கொண்டு பல நூறு செடிகள், மரங்களை குறுகிய காலத்தில் உருவாக்கி அதன்மூலம் அதிகளவு மகசூல் மற்றும் லாபம் பெறலாம். இத்தகைய திசு வளர்ப்பு முறைகள் குறித்து தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
வாழையில் வெற்றிகரமான திசு வளர்ப்பு முறைகள் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி. ராஜ்பிரவீன் தெரிவித்தது:
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழை பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதிகபட்சமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தையில் வாழைக்கு அதிக கிராக்கி உள்ளதால் வாழையை பல லட்சம் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
வாழை சாகுபடியில் பல நடைமுறை சிக்கல்கள் வணிகத்தை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய வாழை சாகுபடி முறையில் குறைந்தளவு இனப்பெருக்கமே செய்ய முடியும்.
நல்ல வாழைக் கரணைகள் இருந்தால்கூட தங்களின் பாரம்பரிய சாகுபடி பரப்பளவை அதிகரிக்கச் செய்ய முடியவில்லை. இச்சூழலில் வாழையில் பூச்சி, நோய் தாக்குதல் கடுமையான உற்பத்தி ஏற்படுத்தி வருகிறது. எனவே பாரம்பரிய வாழை உற்பத்தி முறைகளுக்கு மாற்றாக திசு வளர்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறையில் மிக எளிதாக பல ஆயிரம் முதல் சில லட்சம் வரையிலான தரமான வாழைக் கன்றுகளை சாகுபடிக்கு தயார் செய்ய முடியும். தொடர் வேளாண் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிகள் காரணமாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்கொண்டு நன்றாக வளரும் வாழை ரகங்களை திசு வளர்ப்பில் வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் திசு வளர்ப்பு முறையில் சாகுபடி செய்யப்படும் வாழைகளின் நடவு நாளை கொண்டு அறுவடை நாளை கூட நாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
வாழை விவசாயிகள் அறுவடை நாளை முன்கூட்டியே தெரிந்து கொண்ட காரணத்தால் எளிதாக விற்பனை மற்றும் வணிக முயற்சிகளில் ஈடுபட்டு அதிகளவு லாபம் பெற முடியும். இவ்வாறு பாரம்பரிய வாழை சாகுபடி முறைகளுக்கு மாற்றாக உள்ள திசு வளர்ப்பு முறைகளில் உள்ள பல நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு மற்றும் வர்த்தக பயன்பாடு உள்ளது.
இதன் காரணமாக நமது நாட்டில் தேசிய அளவில் 45 சதவீதம் வரை வாழை சாகுபடி திசு வளர்ப்பு முறைகள் வாயிலாக சாகுபடி செய்யப்படுகிறது.
ஆந்திரம், கேரளம், கர்நாடகம் திசு வளர்ப்பு முறைகள் வாயிலாக வாழை சாகுபடி செய்து அதிகளவு சாகுபடி பரப்பளவை கொண்டுள்ளது. திசு வளர்ப்பு வாழைகளில் மேற்கொள்ளப்படும் நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டுநீர்ப் பாசனம், புதிய உரமிடுதல் முறைகள் அதிகளவு உற்பத்தி பெருக்கத்துக்கு பெரிதும் உதவுகிறது.
பிற பயன்கள்: வாழையோடு மட்டுமல்லாமல் திராட்சை, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ வகைகளும், ஏலக்காய், இஞ்சி, மிளகு, மஞ்சள், குங்குமப்பூ உள்ளிட்ட வாசனைப் பயிர்களும், உருளைக்கிழங்கு, கரணைகிழங்கு ஆகிய காய்கறிகளும், தேயிலை, தேக்கு, மூங்கில் ஆகியவற்றையும் திசு வளர்ப்பு முறையில் பயிரிடலாம்.
எனவே தமிழக விவசாயிகள் திசு வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி அதிகளவு சாகுபடி மற்றும் லாபத்தை பெறலாம் என்கிறார் தி. ராஜ்பிரவீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.