சிறைகளில் நிரப்பப்படாத "உளவியல் ஆற்றுப்படுத்துநர்' பணியிடங்கள்!

மதுரை : தமிழகச் சிறைகளில் உளவியல் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதனால் சிறைகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சிறைத் துறை வட்டாரங்க
Updated on
2 min read

மதுரை : தமிழகச் சிறைகளில் உளவியல் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதனால் சிறைகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும், சிறை வளாக மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள், செவிலியர் மற்றும் ஊழியர்கள் இல்லை எனவும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் இறக்கும் நோயாளி கைதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 தமிழகத்தில் மொத்தம் 13 சிறைகள் உள்ளன. இதில் 3 சிறைகள் பெண்களுக்குரியதாகும். இவற்றைச் சார்ந்து 134 கிளைச் சிறைகளும் உள்ளன. இவற்றில் மொத்தம் 16 ஆயிரம் பேர் வரை உள்ளதாகக் கூறப்படுகிறது.

 அதிகபட்சம் 1,252 பேரை மட்டுமே அடைக்க வசதி உள்ள மதுரை மத்திய சிறையில், இப்போது 1,326 பேர் உள்ளனர். இவர்களில் தண்டனைக் கைதிகள் 727, விசாரணைக் கைதிகள் 568, குண்டர் சட்ட கைதிகள் 22, இசிஏ 3, மரண தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்ட ஒருவர் உள்ளனர். தண்டனைக் கைதிகளில் 60 சதவீதம் பேர் வரை சூழ்நிலையாலும், மனதளவில் பாதிக்கப்பட்டுமே குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறைக்குள் வரும் கைதிகளை இனம் பிரித்து அடைத்தாலே, அவர்களால் எழும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியும்.

 இதற்கென சிறைகளில் "உளவியல் ஆற்றுப்படுத்துநர்' நியமிக்கப்பட்டனர். அவர் சிறைக்கு வரும் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசுவார். அவ்வாறு பேசும்போது, அந்த கைதிகளின் மனநிலை, அவர்கள் குற்றம் செய்த சூழல், அவர்களை எவ்விதமாக நடத்துவது ஆகியவற்றை விவரமாக ஒரு தாளில் குறித்து சிறை அதிகாரிக்குத் தருவார்.

 அந்த விவரங்கள் அடிப்படையில் கைதிகளைத் தரம் பிரிப்பது வழக்கம். தரம் பிரிக்கப்பட்ட நிலையில் கைதிகளை சிறை வார்டன்கள் கண்காணித்தும் வருவர். இத் தரத்தின் அடிப்படையில் கைதியைப் பொதுப் பிரிவில் அடைப்பதா? தனிப்பிரிவில் அடைப்பதா? எனவும் முடிவு செய்யப்படும்.

 மேலும், கைதிகளின் மனநிலையை உளவியல் ரீதியில் அறிந்தால், அதன்பின் அந்தக் கைதிக்கு மன நலச் சிகிச்சை அளிப்பது குறித்தும் முடிவு செய்யமுடியும். கைதியின் குடும்பத்தினரை அழைத்துப் பேசி, கைதி விடுதலையானதும் அவர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமலிருக்க தேவையான ஆலோசனைகளையும் சிறைத் துறை உளவியல் ஆற்றுப்படுத்துநர் வழங்குவார்.

 இதுபோன்ற நடவடிக்கைகளால் போதைக்கு அடிமையாகி, அதன் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பலர் சிறையில் இருந்து வெளியே செல்லும் போது திருந்திய மனநிலை பெற்றவர்களாகச் சென்றுள்ளனர். இதனால், அவர் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

 அதேபோல, தற்கொலை எண்ணத்துடன் இருப்போரும் சிறையில் உளவியல் ஆற்றுப்படுத்துநர் மூலம் சிகிச்சை பெற்று, அந்த எண்ணத்தைக் கைவிட்டு, தண்டனை முடிந்ததும் தன்னம்பிக்கையுடன் வெளியே சென்றுள்ளனர்.

 இப்படி சிறையில் மிக முக்கியப் பணியாற்றும் உளவியல் ஆற்றுப்படுத்துநர்

 பணியிடம் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ளது எனத் தெரிவிக்கின்றன சிறைத் துறை வட்டாரங்கள்.

 உளவியல் ஆற்றுப்படுத்துநர் இல்லாததால், கைதிகளில் மன நலம் பாதிப்பு ஏற்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாத நிலையும் உள்ளது. இதுபோன்ற நிலையால், மனநலம் பாதிப்பு அதிகமாகி சிறையில் ஏராளமானோர் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

 மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் மன நல சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதே போல, சிறையில் கடந்த 4 ஆண்டுகளில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

 இதற்கான காரணம் என்ன என அறிய முடியாத நிலை தற்போது அனைத்து சிறைகளிலும் உள்ளது.

 மருத்துவ வசதி இல்லை: மேலும், தமிழக சிறைகளில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மதுரை மத்தியச் சிறையில் 30 படுக்கைகளுடன் மருத்துவமனை உள்ளது.

 இதில் 2 மருத்துவர்கள், 1 செவிலியர், 2 உதவியாளர்கள், 1 மருந்தாளுநர் என 6 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், உள்நோயாளிகளாக 15 பேரும், தினமும் புறநோயாளிகளாக 300 பேரும் மருத்துவமனைக்கு வருவதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மருத்துவமனையில் உதவியாளர் பணியிடம் 3 ஆகும். ஆனால், இப்போது 2 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மதுரையில் கைதிகள் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் இதய நோய் பாதிப்பால் இறந்திருப்பதையும் சிறைத் துறை வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

 காலை 8 முதல் மாலை 6 மணி வரையில் சிறையில் மருத்துவமனை செயல்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் நோயாளிகளுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்பு ஏற்பட்டால், அவர்களை அரசு மருத்துவமனைக்குத்தான் அனுப்ப நேரிடுகிறது. இதுபோன்ற நேரங்களில் உடனடி சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறக்க நேரிடுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com