பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் தாற்காலிக இளநிலை உதவியாளர்கள்

மயிலாடுதுறை: தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக இளநிலை உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள
Updated on
2 min read

மயிலாடுதுறை: தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக இளநிலை உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது, அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா உத்தரவின் பேரில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 11,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, தொகுப்பூதியமாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டு, தாற்காலிக இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.

ரூ. 4 ஆயிரம் மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஊழியர்கள் தொடர்ச்சியாக நடத்திய பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக அரசு 2009-ம் ஆண்டு முதல் இவர்களின் ஊதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தியது.

பின்னர் முந்தைய திமுக அரசு 17.2.2007 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இவர்களின் பணியை உறுதி செய்யும் வகையில் சிறப்புத் தேர்வை நடத்தியது. இதைத்தொடர்ந்து 2009, 2010-ம் ஆண்டுகளில் 9 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு நவம்பர் 2010-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு மே 2011-ல் 1200 பேருக்கு மட்டும் துறைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இவர்களுக்கு இதுவரை நிரந்தரப் பணியிடம் வழங்கப்படவில்லை.

இளநிலை உதவியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று மனுக்கள் கொடுக்கும்போது 2 ஆயிரம் பேரின் பணியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மூலம் உறுதியளிக்கப்பட்டதாம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் மட்டும் பணிபுரியும் மீதமுள்ள 2 ஆயிரம் தாற்காலிக இளநிலை உதவியாளர்கள் மனவேதனையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் இருந்தும், இவற்றை நிரப்ப முந்தைய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இந்த ஊழியர்கள் மத்தியில் உள்ளது.

இதுகுறித்து அரசு அலுவலர்கள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் கரூர் எம்.எஸ். அன்பழகன், பொருளாளர் கோட்டைசாமி ஆகியோர் கூறியது: ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியம் பெற்றுக் கொண்டு பணிபுரியும் 2000 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் எம். மூர்த்தி, எஸ். சரவணன் ஆகியோர் தெரிவித்தது:

2003-ல் நியமிக்கப்பட்ட தாற்காலிக இளநிலை உதவியாளர்கள் 11 ஆயிரம் பேரில் 9 ஆயிரம் பேருக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல மீதமுள்ள 2 ஆயிரம் பேருக்கும் நிரந்தரப் பணி ஆணை வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இதைச் செய்ய வேண்டும் என்பதே இந்த ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com