மதுரை: ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்களில் ஒரு சாராருக்கு பதவி உயர்வு அளித்த நிலையில், அதே ஆண்டில் பணிபுரிந்த மற்றொரு சாராருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 1997-ல் நேரடியாக எழுத்துத் தேர்வு மூலம் 650 பேர் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 1998-ல் பணி நியமனம் வழங்கப்பட்டது.
ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் சிறப்புப் பயிற்சிக்கான போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், 1999-ல் 260 பேர் முதல் கட்டமாக சென்னையில் அசோக் நகர், வீராபுரம் ஆகிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக 2000-ல் மீதமிருந்த 390 பேர் சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பயிற்சி முடித்தவர்கள் தற்போது பணியில் உள்ளனர்.
போலீஸ் துறையில் முறையாக 10 ஆண்டு போலீஸ் பணி நிறைவடைந்தவர்களுக்கு கிரேடு 1 என்ற பதவி உயர்வும், 15 ஆண்டுகள் பணி நிறைவடைந்தவர்களுக்கு ஏட்டு பதவி உயர்வும் வழங்கப்படுவதே வழக்கமாக இருந்துவருகிறது.
அதன்படியே தற்போதும் 25 ஆண்டு பணி நிறைவடைந்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவே போலீஸ் துறையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையாகும்.
ஆனால், 1998-ல் பணி நியமனம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் இன்னும் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் சட்டம், ஒழுங்கு பிரிவில் பணியாற்றியவர்கள்.
இதே ஆண்டில் நியமனம் பெற்று 1999-ல் பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த ஆண்டு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணியில் சேர்ந்த ஆண்டை வைத்துத்தான் பதவி உயர்வு அளிப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது ஒரே ஆண்டில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களில் 272 பேருக்கு மட்டும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்கள் என முத்திரை குத்தியே தங்களுக்கு பதவி உயர்வை நியாயமாக வழங்கவில்லை என்றும் சம்பந்தப்பட்டோர் ஆதங்கப்படுகின்றனர்.
தற்போது மாநில அளவில் இன்ஸ்பெக்டர்களுக்கான 640 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பும்போது நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேபோல, சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த இடங்களை நிரப்பவேண்டும் எனவும், பதவி உயர்வு அடிப்படையில் இப்பணியிடங்களை நிரப்பும்போது ஆயுதப் படை, பட்டாலியன் பிரிவினரை போலீஸ் நிலையங்களில் நியமித்து போலீஸ் பற்றாக்குறையைப் போக்கலாம் என்றும் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
புதிய திட்டம் எப்போது? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போலீஸôரே தற்போதும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தொகை நான்கு மடங்கு பெருகியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது.
இடங்களின் விரிவாக்கத்துக்கு ஏற்ப போலீஸ் எண்ணிக்கையும், போலீஸ் நிலைய எண்ணிக்கையும் உயர்த்தப்படவில்லை என்றும், இதனால் குற்றங்களைத் தடுப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸ் நிலையங்களை தரம் பிரித்து, அதற்கேற்ப போலீஸ் எண்ணிக்கையை கூடுதலாக்க கடந்த ஆண்டு புதிய திட்டம் தீட்டப்பட்டதாகவும், ஆட்சி மாறிய நிலையில் அத்திட்ட செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மக்கள் பாதுகாப்பில் மிக முக்கிய துறையாக இருப்பது போலீஸ் துறையாகும். ஆகவே, அத்துறையில் உள்ளோருக்கு நியாயமான பதவி உயர்வு வழங்குவதுடன் போலீஸ் துறையை காலத்துக்கு ஏற்ப நவீனமாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.