அதியமான் கோட்டையில் ஓர் அவலம்: தரையில் கிடக்கும் 800 ஆண்டு பொக்கிஷங்கள்!

தருமபுரி, மே 19: தருமபுரி தொல்பொருள் அகழ்வைப்பகத்தினுள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக்கல் (மைல் கல்), 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகியவை தரையில் கிடத
அதியமான் கோட்டையில் ஓர் அவலம்: தரையில் கிடக்கும் 800 ஆண்டு பொக்கிஷங்கள்!
Updated on
2 min read

தருமபுரி, மே 19: தருமபுரி தொல்பொருள் அகழ்வைப்பகத்தினுள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அதியமான் பெருவழிக்கல் (மைல் கல்), 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகியவை தரையில் கிடத்தப்பட்டுள்ளன.

 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு கொண்டுச்செல்லப்பட்ட இப் பழம்பெரும் பொக்கிஷங்கள் இவ்வாறு பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

 தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் இயங்கும் இந்த அகழ்வைப்பகம் 1979-ம் ஆண்டு முதல் தருமபுரியில் இயங்கி வருகிறது. இப்போது தருமபுரி நகர பஸ் நிலையம் அருகே செயல்படுகிறது.

 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்படும் பழங்கால பொக்கிஷங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 860 பழங்கால பொருள்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

 மருத்துவ ஓலைச்சுவடிகள், எழுத்தாணி (18, 19-ம் நூற்றாண்டு), கிண்ணங்கள், சுடுமண் தட்டு (2-ம் நூற்றாண்டு) சுடுமண்தாங்கி (3-ம் நூற்றாண்டு), காசுக்கலையம் (15-ம் நூற்றாண்டு), சுடுமண் உருவம் தலைப்பகுதி, ஐரோப்பியர் தலை உருவம், தலை அலங்காரம் குடுமி, சீன மனிதன் தலை (17-ம் நூற்றாண்டு), புத்தர் சிலை (10-ம் நூற்றாண்டு), யானை தீர்த்தம் (11-ம் நூற்றாண்டு), ஆலமர் செல்வர் தீர்த்தம் (12-ம் நூற்றாண்டு), ஐந்து கால் ஜாடி (3-ம் நூற்றாண்டு), நடுகல் (6-ம் நூற்றாண்டு), சுடுமண் குழாய் (10-ம் நூற்றாண்டு), விநாயகர் தீர்த்தம், காளி சிற்பம் (13-ம் நூற்றாண்டு), காளி குந்தாணி (11-ம் நூற்றாண்டு, இந்திரன், அம்மன், சந்திரன் மரச்சிற்பங்கள் (18-ம் நூற்றாண்டு), மரக் குடுவை (2-ம் நூற்றாண்டு), ராவணன் மரச்சிற்பம் (16-17-ம் நூற்றாண்டு), மாணிக்கவாசகர் சிலை (13-ம் நூற்றாண்டு), முதுமக்கள் ஈமப்பேழை (13-14-ம் நூற்றாண்டு) உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 நடுகல் (18-ம் நூற்றாண்டு), அதியமான் பெருவழிக்கல் (12-ம் நூற்றாண்டு), புலிக்குத்திபட்டான் கல் (14-ம் நூற்றாண்டு), சமணர் சிற்பம் (8-ம் நூற்றாண்டு) உள்ளிட்டவை அகழ்வைப்பக வளாகத்தில் தனித்தனியாக சிமென்ட் திண்டு அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

 இந் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கண்காட்சி அரங்கில் வைப்பதற்காக நடுகல், அதியமான் பெருவழிக்கல் ஆகியவை கடந்த ஆண்டு கோவைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும் அங்கிருந்து மீண்டும் தருமபுரிக்கு எடுத்து வரப்பட்டன.

 ஆனால், சிமென்ட் திண்டு அமைத்து அதன் மேல் பாதுகாப்பாக வைக்கப்படாமல் தரையில் கிடத்தப்பட்டுள்ளன. சுமார் ஓராண்டாக இந்த அவலம் தொடர்கிறது.

 இது குறித்து அகழ்வைப்பக ஊழியர்கள் கூறியது: "அகழ்வைப்பகங்களில் உள்ள சிலைகள், நடுகல் போன்றவற்றை வைப்பதற்கான சிமென்ட் தளம் கட்ட வேண்டுமென்றால், சென்னையில் உள்ள தொல்லியல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பொறியாளர் வர வேண்டும். இந் நிலை குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். பொறியாளர்களும் வந்து அளவு எடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால்,அதன்பின் தொடர் நடவடிக்கை இல்லை. உயரதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது:

 "பழம்பெரும் பொக்கிஷங்கள் கொண்ட தருமபுரி தொல்லியல் அகழ்வைப்பகத்தில் 2 ஆண்டுகளாக காப்பாட்சியர் பணியிடம் காலியாக உள்ளது. கோவையில் உள்ள தொல்லியல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். வெகு தூரத்திலிருந்து வந்து இங்குள்ள அகழ்வைப்பகத்தை கவனிப்பது சாத்தியமில்லை. இங்கு தொல்லியல் காப்பாட்சியர், தொல்லியல் அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே இங்குள்ள பொக்கிஷங்களை பாதுகாப்பாக வைக்க முடியும்' என்றனர்.

 தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் இது போன்ற பழம்பெரும் பொக்கிஷங்களை பாதுகாத்து அதியமான் கோட்டைக்கு பெருமை சேர்க்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com