கட்டில், கருவி இன்றி நவீன சிகிச்சைப் பிரிவு!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் புதிய விரிவாக்கக் கட்டடத்தில் செயல்பட உள்ள மருத்துவப் பிரிவுகளுக்கான கருவிகளை கொள்முதல் செய்ய போதுமான நிதி ஒதுக்காததால், அப்பிரிவுகள் செயல்படுவது கேள்விக்குறிய
Updated on
2 min read

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் புதிய விரிவாக்கக் கட்டடத்தில் செயல்பட உள்ள மருத்துவப் பிரிவுகளுக்கான கருவிகளை கொள்முதல் செய்ய போதுமான நிதி ஒதுக்காததால், அப்பிரிவுகள் செயல்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த ஆட்சியில், மதுரை அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்கக் கட்டடம் ரூ. 28 கோடி செலவில் கட்டப்பட்டது. விபத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில், மருத்துவக் கருவிகளை அமைக்க அப்போதைய தி.மு.க. அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், கட்டடம் வெறும் காட்சிப் பொருளாகக் காணப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விரிவாக்கக் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து, மதுரை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ரா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் மதுரை வந்து மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தைப் பார்வையிட்டார்.

அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில், விரிவாக்கக் கட்டடத்தில் உடனே சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என மருத்துவர்களிடம் அறிவுறுத்திய அவர், ராஜாஜி மருத்துவமனையிலிருந்து தேவையான கருவிகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

அமைச்சரது உத்தரவின்படி, ராஜாஜி மருத்துவமனையிலிருந்து பழைய எக்ஸ்ரே, படுக்கைகள் ஆகியன புதிய விரிவாக்கக் கட்டடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ராஜாஜி மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பெறுவோருக்கு, கூடுதல் சிகிச்சைக்கான இடமாகவே விரிவாக்கக் கட்டடம் பயன்பட்டு வருகிறது. மேலும், இதுவரையில் கட்டடம் முறையாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுப் பணித் துறையினரால் ஒப்படைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் விரிவாக்கக் கட்டடத்தில் வெண்டிலேட்டர், அறுவைச் சிகிச்சை அரங்க மின் விளக்குகள் வாங்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில்தான், கடந்த 4 நாள்களுக்கு முன்பு மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், மாநில மருத்துவக் கல்வி துணை இயக்குர் கீதா ஆகியோர் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது நடந்த கூட்டத்தில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவை ஒரு வாரத்துக்குள் அப்படியே இடம் மாற்றி விரிவாக்கக் கட்டடத்துக்கு கொண்டுவர வேண்டும் என திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் நாள்தோறும் விபத்தில் காயமடைந்து இங்கு வருவோரைப் பாதுகாக்கும் வகையில், நவீன சாதனங்களுடன் சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் பிராணவாயு அளிப்பது உள்ளிட்ட எவ்வித நவீன மருத்துவச் சாதனங்கள் இன்றியும், போதுமான ஆள்கள் இல்லாமலும் சிகிச்சையைத் தொடங்க கூறியிருப்பது எவ்விதத்தில் நியாயம் என மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், தற்போதைய நிலையில் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு போதிய எண்ணிக்கையில் படுக்கைகள் இல்லை. ஆதலால், நோயாளிகள் இந்த மழைக் காலத்திலும், தரையில் படுத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை புதிய கட்டடத்துக்கு அப்படியே இடமாற்றம் செய்தால், அங்கும் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தரையில்தான் படுக்க வேண்டி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு உடனே தீர்வுகாண வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com