கேரளம் விரும்பும் தமிழக மண்பாண்ட பொருள்கள்!

தென்காசி, நவ. 14: திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உற்பத்தியாகும் மண்பாண்டப் பொருள்களை கேரளத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும், பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.  இயந்திரங்களின் ஆதிக்கத்தால
கேரளம் விரும்பும் தமிழக மண்பாண்ட பொருள்கள்!
Updated on
1 min read

தென்காசி, நவ. 14: திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உற்பத்தியாகும் மண்பாண்டப் பொருள்களை கேரளத்தைச் சேர்ந்த வர்த்தகர்களும், பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

 இயந்திரங்களின் ஆதிக்கத்தால் மண்பாண்டப் பொருள்களே சிறிது சிறிதாக அழிந்துவரும் காலமிது. கிராமப்புறங்களில்கூட வீடுகளில் மண்பானைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் தயாராகும் மண்பாண்டங்களைக் கேரள மக்கள் விரும்பி வாங்கிச் செல்லும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இலஞ்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களுக்குதான் அத்தனை கிராக்கி.

 இலஞ்சி, செங்கோட்டை, வாவாநகரம், தேன்பொத்தை ஆகிய பகுதிகளில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தியில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு பானைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், விளக்குகள், பூந்தொட்டிகள், பறவைகள் தங்கும் கூடுகள் உள்ளிட்ட மண்ணாலான ஏராளமான பொருள்கள் செய்யப்படுகின்றன. இந்தப் பொருள்கள் தமிழ்நாட்டைவிட கேரளத்தில் அதிகமாக விற்பனையாகின்றன. கேரளத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக, மீன் உணவு சமைப்பதற்குத் தேவைப்படும் மண்பானைகளுக்கு இங்கு அதிகமான வரவேற்பு உள்ளது. இலஞ்சி பகுதியில் கிடைக்கும் மண்ணின் சிறப்பே அதற்குக் காரணம் என கேரள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும், மண்பாண்டங்களைத் தரமானதாகவும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் செய்து கொடுப்பதில் சிறந்த தொழிலாளர்கள் இப்பகுதியில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள இலஞ்சி மண்பாண்ட தொழிலாளர் சங்கம் பொன்விழாவைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

 10.3.1959-ல் தொடங்கப்பட்ட இச்சங்கம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்துக்கு சொந்தமாக அலுவலகம், உற்பத்திக் கூடம், மண்பாண்டங்களைக் காய வைப்பதற்கு சூளைகள் உள்ளன.

 இந்தச் சங்கம் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திலேயே சிறந்த கூட்டுறவு சங்கமாகத் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இப்போது கார்த்திகை மாதம் என்பதால் இலஞ்சி பகுதியில் மண் விளக்குகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகின்றன. ஒரே மாதிரியான சிறிய விளக்குகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். "பொதுமக்கள் தாங்களாக விரும்பி ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வேண்டும் எனக் கூறினால், அதுபோன்ற விளக்குகளைச் செய்து தருவோம்' எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். கார்த்திகை மாதம் முடிந்தவுடன் பொங்கலுக்குத் தேவையான மண்பாண்டப் பொருள்களின் உற்பத்தி தொடங்கிவிடும்.

 கோரிக்கை: பொன்விழா கண்ட இலஞ்சி மண்பாண்டத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலகம் மற்றும் உற்பத்திக் கூடம் இப்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவற்றைச் சீரமைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்ட மண்பாண்டப் பொருள்களைக் காய வைப்பதற்கு சேதமடைந்த சூளையை சீரமைத்துத் தர வேண்டும்; இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு வங்கியிலிருந்து கடனுதவி ù பற்றுத் தந்தால் மேலும் பல தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com