கூடலூர் மக்களை விடாது துரத்தும் சிக்கல்கள்! நடவடிக்கை எடுக்குமா அரசு ?

உதகை: தட்பவெப்பநிலையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நீலகிரி மாவட்டம், பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கேரள மற்றும் கர்நாடக எல்ல
Updated on
2 min read

உதகை: தட்பவெப்பநிலையில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நீலகிரி மாவட்டம், பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கேரள மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கூடலூர் பகுதி மாவட்டத்திலேயே அதிகளவிலான பிரச்னைகளை சந்திக்கும் பகுதியாக இப்போது உள்ளது.

கர்நாடக வனத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிவிக்கையில், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கக்கூடிய பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதியில் வனவிலங்குகளுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்போது இரவு நேர போக்குவரத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை விதிக்கப்பட்டுள்ள தடையை மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை நீட்டிப்பது எனவும், இதுதொடர்பாக ஆட்சேபனைகள் ஏதாவது இருந்தால் அவற்றை நவம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டுமெனவும், ஆட்சேபனைகள் ஏதுமில்லாத பட்சத்தில் இந்த நேர மாறுதல் டிசம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக எல்லைப் பகுதியான கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல வேண்டிய வாகனங்கள் மாலை 6 மணிக்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும். ஏற்கனவே இரவு 9 மணிக்கு மேல் பந்திப்பூர் வனச்சரணாலயம் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்பாகவே இந்தப் புதிய பிரச்னையும் எழுந்துள்ளதால் கூடலூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கேரள மாநில மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்:

கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட்டை பகுதியிலிருந்து, நாகப்பட்டினம் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தவொரு பகுதியும் 3 மணி நேரத்திற்கு மேல் மூடப்படக்கூடாது. ஆனால் தமிழக-கர்நாடக எல்லையில் தற்போது 9 மணி நேரமாக மூடப்படும் தேசிய நெடுஞ்சாலை, இனிமேல் 12 மணி நேரத்திற்கு மூடப்படவுள்ளது என்ற அறிவிப்பு அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காதது ஏன் என்பதோடு, இத்தகைய நடவடிக்கை மனித உரிமை மீறல் எனவும் கூடலூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக கர்நாடக அரசு அதிகாரிகள், பந்திப்பூர் வனச் சரணாலயம் வழியாக தமிழக எல்லைக்குள் செல்வதற்குப் பதிலாக சாம்ராஜ்நகர், சத்தியமங்கலம் வழியிலான சாலையை பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பந்திப்பூரிலிருந்து கூடலூர் பகுதிக்கு சுமார் 20 கி.மீ. தொலைவை கடப்பதற்கு பதிலாக, சாம்ராஜ் நகர் வழியிலான சாலையைப் பயன்படுத்தினால் குறைந்தது 270 கி.மீ. தூரத்தைச் சுற்றி வரவேண்டும். இதனால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

கூடலூர் பகுதியைப் பொறுத்தமட்டில் செக்சன் 17 நிலப் பிரச்னை, தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம், புலிகள் காப்பகப் பகுதி விரிவாக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு இரவு நேரப் போக்குவரத்தில் 12 மணி நேரம் தடை செய்யும் நடவடிக்கைகள் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளன.

28-ல் பந்த்

இதைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இம்மாதம் 28-ம் தேதி ஒருநாள் பந்த் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலான நிலை குறித்து தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி உரிய தீர்வு கண்டால்தான் இப்பிரச்னைக்கு விடிவு ஏற்படும் என்பதே கூடலூர் பகுதி மக்களின் கருத்தாகும்.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலுள்ள கூடலூர் பகுதி மக்கள், திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சாலைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதோடு, அதில் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களுக்கும் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com