

திருச்சி, நவ. 19: முருகவேள் பன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையான "சேய்த் தொண்டர் புராணம்' நூல் வெளியீட்டு விழா திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில முருக பக்தர் பேரவை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தெய்வ முரசு ஆன்மிக மாத இதழ், ஓமாந்தூர் நால்வர் அறக்கட்டளை ஆகியவை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு, தெய்வமுரசு ஆன்மிக இதழின் ஆசிரியர் மு.பெ. சத்தியவேல் முருகனார் தலைமை வகித்தார். காலை 5 மணிக்கு பன்னிருவர் சிவபூஜை நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு ஆனைமேல் எழுந்த ஆறுமுகன் பன்னிரு திருமுறையுடன் வீதியுலா நடைபெற்றது. அடியார்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முருகவேள் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. இதையடுத்து தேனூர் வரகவி சொக்கலிங்கம்பிள்ளை எழுதிய "சேய்த் தொண்டர் புராணம்' என்ற நூலை முருக பக்தர் பேரவையின் சிறப்புத் தலைவர், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வெளியிட, ஆறுநாட்டு வேளாளர் மூத்தக் குடிமகன் பெரி. திருப்பதியாபிள்ளை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிதம்பரம் மவுனமடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள், பழனி சாதுமடம் சாது சண்முக அடிகளார், தஞ்சாவூர் சொக்கநாதர் திருமடம் சிவ ராமசாமி அடிகளார், மருதமலை வேல்கோட்ட தியான மடம் குருநாத சுவாமிகள் உள்ளிட்டோர் மூலம் நூல்கள் வழங்கப்பட்டன.
துறையூர் திருமண மண்டப கட்டடக் குழுத் தலைவர் மரு. வையாபுரி பிள்ளை, சிவானி கல்விக் குழுமத் தலைவர் பி. செல்வராஜ், மங்கள் அண்டு மங்கள் அதிபர் பி. மூக்கப்பிள்ளை, தெய்வமுரசு பதிப்பாசிரியர் பா. சீனிவாஸ் உள்ளிட்டோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, நால்வர் அறக்கட்டளை மா. திருநாவுக்கரசு வரவேற்றார். முருக பக்தர் பேரவை அறக்கட்டளைச் செயலர்
வீ. ஆறுமுகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.