காவல் நிலையங்களில் காலாவதியாகும் விசாரணைப் பெட்டி

சென்னை: தமிழகக் காவல்துறையை நவீனமயமாக்கும் விதமாக வழங்கப்பட்ட விசாரணைப் பெட்டிகளில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவை காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.  தமிழகக் காவல்துறையை நவீனப்படுத
Updated on
2 min read

சென்னை: தமிழகக் காவல்துறையை நவீனமயமாக்கும் விதமாக வழங்கப்பட்ட விசாரணைப் பெட்டிகளில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவை காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.

 தமிழகக் காவல்துறையை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு மாநிலத்தின் பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான விசாரணைப் பெட்டி என்று அதிநவீன விசாரணைக் கருவிகளுடன் கூடிய பெட்டியை வழங்கியது. இரண்டு பெட்டிகளாக இவை வழங்கப்பட்டன.

 சிறிய அளவில் இருக்கும் இந்தப் பெட்டியில் 38 கருவிகளும், பெரிய பெட்டியில் 63 கருவிகளும் உள்ளன. இதில் பெரிய பெட்டியில் டிஜிட்டல் கேமரா, மெட்டல் டிடெக்டர், கைரேகையைப் பதிவு செய்யும் கருவி, கால்ரேகையைப் பதிவு செய்யும் கருவி, 2 டார்ச் லைட், எமர்ஜென்சி லைட், அளவுகோல், ஸ்க்ரூ டிரைவர், கிளாஸ் கட்டர், மார்க்கர், கத்தி, பென்சில்கள் உள்ளிட்ட 63 பொருள்கள் இருக்கின்றன.

 சிறிய பெட்டியில் சுத்தியல், கட்டிங் பிளேயர், கத்திரிக்கோல், இடுக்கி, ரம்பம் உள்ளிட்ட 38 பொருள்கள் இருக்கின்றன. இந்த விசாரணைப் பெட்டி, வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றம் நடைபெறும் இடங்களில் கிடைக்கும் தடயங்களை அழியாமல் உடனடியாகப் பதிவு செய்யவும், நேரத்தை மிச்சப்படுவும் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் காவல் நிலையங்களுக்கு இப்பெட்டிகள் வழங்கப்பட்டன. பின்னர் ஊரகப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பெட்டிகள் வழங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், பெரும்பாலான காவல் நிலையங்களில் அவை காட்சிப்பொருளாகவே இருக்கின்றன. எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிறிதும் நிறைவேற்றாத வகையில் காவல் நிலையங்களின் பழைய பொருள்களோடு கிடப்பதாகக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

 காலாவதி...

 பல காவல் நிலையங்களுக்கு இந்தப் பெட்டி வழங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டதால், கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவை காலாவதியாகும் நிலைமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 இந்தப் பொருள்களைப் பயன்படுத்தும்போது ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ, உடைந்தாலோ அதன் செலவைத் தாங்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் இதைப் பயன்படுத்த ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனராம். டிஜிட்டல் கேமரா, கைரேகையைப் பதிவு செய்வது, கால்ரேகையைப் பதிவு செய்வது ஆகியவை குறித்து காவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதில் கோயம்பத்தூர் மாநகரக் காவல்துறை உள்பட ஒரு சில மாவட்டக் காவல்துறையினருக்கு மட்டும் பயிற்சி அளித்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயிற்சி இல்லாததால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக காவலர்கள் கூறுகின்றனர்.

 இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான விசாரணைப் பெட்டிகள் காவல் நிலையங்களில் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் வழக்கம்போலவே தடயங்களைப் பதிவு செய்வதிலும், விசாரணை செய்வதிலும் தொய்வு ஏற்பட்டு வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்கு இந்தப் பெட்டியில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு காவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும், வழக்கின் தேவைக்கு ஏற்ப இந்தப் பெட்டியைப் பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும், இந்த பெட்டியின் பயன்பாடு குறித்துக் காவல்நிலையம் வாரியாக உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஐ.ஜி.

 இந்த நடவடிக்கையை எடுக்கத் தவறும்பட்சத்தில், காலப்போக்கில் அந்தப் பெட்டிகள் காலாவதியாகி பயனற்றுபோகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com