
கடலூர்: விவசாயத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இயற்கை உரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
தொழு உரங்கள், கம்போஸ்ட் உரங்கள், அங்கக உரங்களின் உபயோகம் குறைந்த நிலையில், நுண்ணூட்டச் சத்துக்களை அளவறிந்து, தனியாக இடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நெல் சாகுபடியில் தொழில்நுட்ப விழிப்புணர்வு விவசாயிகளிடம் அதிகரித்து உள்ளது. எனினும் பல்வேறு புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்ளாததாலும் தேவையான இடுபொருள்களை, குறிப்பாக நுண்ணூட்ட சத்து நிறைந்த உரங்களை உரிய காலத்தில் வயலில் இடாததாலும் நெல் மகசூல் குறைந்து விடுகிறது.
நெல் பயிர் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் தருவதற்கு, 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுவதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.
கார்பன் மற்றும் ஆக்சிஜனை வாயு மண்டலத்தில் இருந்தும், ஹைட்ரஜன் மழைநீர் மற்றும் பாசன நீரில் இருந்தும், பிóறசத்துக்களை மண்ணில் இருந்தும் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன.
தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பேரூட்டச் சத்துக்களாகவும், கால்சியம், மக்னீஷியம், கந்தகச் சத்துக்கள் 2-ம் நிலை சத்துக்களாகவும், இரும்பு, மாங்கனீஷ் துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டீனியம், மற்றும் குளோரின் போன்றவை நுண்ணூட்டச் சத்துக்களாகவும் பயிர்களுக்குப் பயன் தருகின்றன.
நுண்ணூட்டச் சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு சிறிதளவே தேவைப்படுகிறது. என்றாலும், பயிர்களின் வளர்ச்சி காலத்தில் அவைகள் கிடைக்கா விட்டால், ஏனைய உரங்களை இட்டாலும், உரிய மகசூல் சரியாகக் கிடைக்காது. பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் அளித்தால்தான் சீரான வளர்ச்சியும் சிறந்த மகசூலும் கிடைக்கும்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் ஆய்வில் துத்தநாகச் சத்துக் குறைவு அதிக அளவிலும், இரும்பு, தாமிரச் சத்து பற்றாக் குறையும் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
துத்தநாகச் சத்து: நுண்ணூட்டச் சத்துக்களில் துத்தநாகச் சத்து பயிர்களில் வளர்ச்சி ஊக்கத்தையும், மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து உற்பத்தியையும் ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும், கதிர்களில் மணி அதிகளவில் பிடிக்கவும், நீரை சீராக உறிஞ்சவும் உதவுகிறது. துத்தநாகச் சத்து குறைந்தால் இலைகளின் நரம்பு வெளுத்துப் போதல், தூர் வளர்ச்சி குறைதல், தானிய முதிர்ச்சி தாமதம், கெய்ரா என்ற நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இச்சத்து பற்றாக் குறையை போக்க, ஹெக்டேருக்கு துத்தநாக சல்பேட் 25 கிலோ இடவேண்டும்.
இரும்புச் சத்து: பச்சையம் தயாரித்தல், என்ûஸம் செயல்பாட்டை ஊக்குவித்தல், தழைச் சத்தை பயிர்கள் ஏற்க உதவுதல் போன்ற பணிகளைச் செய்கிறது. இச்சத்து குறைந்தால் இலை வெளிர்நிலை அடையும். வளர்ச்சி குன்றும். இரும்புச் சத்து பற்றாக் குறையை போக்க ஹெக்டேருக்கு 50 கிலோ இரும்பு சல்பேட் என்ற அன்னபேதி உப்பை தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும்.
மற்ற சத்து உரங்கள்: கால்சியம், மக்னீஷியம் மற்றும் கந்தகச் சத்துக்கள், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் முக்கிய பங்காற்றுகிறது. இச் சத்துக்கள் ஜிப்சம், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட், சர்க்கரை ஆலை அழுக்கு, தொழுஉரம் ஆகியவற்றில் கணிசமாக உள்ளன.
தாமிரச் சத்து பயிர்களில் பச்சையம் உற்பத்தி, பூக்களில் சூல் தரித்து மணி பிடித்தல் மற்றும் பதர்களைக் குறைக்கவும் பயன்படுகிறது. இச்சத்து குறைபாட்டைப் போக்க ஹெக்டேருக்கு 10 கிலோ தாமிர சல்பேட் இடவேண்டும்.
மாங்கனீஷ் பச்சையம், புரதம் தயாரிக்கவும், இரும்புச் சத்தால் ஏற்படும் நச்சுத் தன்மையை போக்கவும் உதவுகிறது. இச்சத்து குறைபட்டால் இளம் இலைக் குருத்து குறுகி, வெளுத்து காணப்படும். இலைகளில் சிவப்புப் புள்ளிகள் காணப்படும். இலைகள் விரைவில் கருகும். இச்சத்தைப் போக்க ஹெக்டேருக்கு 25 கிலோ மாங்கனீஷ் சல்பேட் இடவேண்டும்.
போரான் சத்து குறைந்தால் பயிர்கள் வளர்ச்சி குறையும். இலைகள் வெளுத்து உள்நோக்கி வளையும். இக்குறைபாட்டை தவிர்க்க ஹெக்டேருக்கு 10 கிலோ போரக்ஸ், 50 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும். மாலிப்டீனியம் குறைபாட்டால் பயிர் வளர்ச்சி குறையும். இப்பற்றாக் குறையை போக்க ஹெக்டேருக்கு 1 கிலோ சோடியம் மாலிப்டேட் அளிக்க வேண்டும். குளோரின் குறைபாட்டால் ஒளிச்சேர்க்கை பாதிக்கும். எனினும் இப்பற்றாக்குறை பயிர்களில் அதிகம் தென்படுவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.