மாநகராட்சி கவுன்சிலர்களின் கடமைகள் என்ன?

சென்னை, அக். 23: மக்களால் தேர்வு செய்யப்படும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன் ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குக் குறையாத பரபரப்புடன் மாநகராட்சிகளுக்கான தேர
Updated on
2 min read

சென்னை, அக். 23: மக்களால் தேர்வு செய்யப்படும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு முன் ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குக் குறையாத பரபரப்புடன் மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடும் போட்டி, தீவிரப் பிரசாரம், பெரும் செலவு ஆகியவற்றைக் கடந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள்தான் என்ன?

இந்தக் கடமைகள் பற்றி அறிந்து கொள்வதில் பொதுமக்களிடம் மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களிடமும் ஆவல் காணப்படுகிறது. தான் தேர்வு செய்யப்பட்ட வார்டு மக்களின் குரலாக ஒலித்து, அந்த வார்டில் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய பிரதான கடமை கவுன்சிலர்களுக்கு உள்ளது.

குடிநீர் விநியோகம், கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றுதல், சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை சேவைகள் தொடர்பாக ஒவ்வொரு வார்டிலும் தினமும் பல பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தேவைப்பட்டால் மேயரைத் தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு மிக விரைவாகத் தீர்வு காண வேண்டியதுதான் கவுன்சிலரின் மிகப் பிரதானமானப் பணியாகும்.

மாநகராட்சியில் மண்டலக் குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டலக் குழுவும் சுமார் 15 வார்டுகளை உள்ளடக்கியதாக இருக்கும். 15 வார்டு கவுன்சிலர்களில் ஒருவர் மண்டலக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். தனது வார்டில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சித் திட்டங்களை அடையாளம் கண்டறிந்து, அவற்றை மண்டலக் குழுத் தலைவரின் கவனத்துக்கு கவுன்சிலர் எடுத்துச் செல்ல வேண்டும். மண்டலக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலரின் முன்மொழிவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி நிலைக்குழுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். நிலைக் குழுவின் பரிந்துரையோடு, மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திட்டத்துக்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

ஆக, தேவையான வளர்ச்சித் திட்டத்தை அடையாளம் காணுவது தொடங்கி, மண்டலக் குழு, நிலைக் குழுக்களின் வழியாக மாமன்றக் கூட்டத்துக்கு முன்மொழிவுகளைக் கொண்டு சென்று, திட்டம் நிறைவேற்றப்படும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட வேண்டியவராகக் கவுன்சிலர் உள்ளார்.

அவ்வாறு நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிப்பதும், அதில் ஏற்படும் குறைகளை சரி செய்வதிலும் கவுன்சிலர் கவனம் செலுத்த வேண்டும்.

அடிப்படை சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தினமும் வரும் முறையீடுகளைக் கேட்டு, நிவர்த்தி செய்வது, புதிதாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றப் பாடுபடுவது தவிர வெள்ளம், தீ விபத்து போன்ற இடர்கள் நடைபெறும் நேரத்தில் பாதிக்கப்படும் மக்களுடன் உடனிருந்து மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபடுவதும், சம்பந்தப்பட்ட பிற துறை அதிகாரிகளை அந்தப் பணிகளில் ஈடுபடச் செய்வதும் பிற முக்கியக் கடமைகளாகும்.

தனது வார்டு தவிர, மாநகராட்சியின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, வழக்கமான பணிகளில் குறைகள் இருந்தாலோ அது பற்றி கேள்வி எழுப்பவும், அதற்காக மேயர் மற்றும் ஆணையரை எந்த நேரமும் அணுகவும், அது தொடர்பாக தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கோப்புகளைக் கேட்டுப் பெற்று சரி பார்க்கவும் கவுன்சிலர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில்: கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களில் ரேஷன் அட்டை, ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை தகுதியானர்களுக்குப் பரிந்துரை செய்து, வாங்கிக் கொடுப்பது உள்பட ஏராளமான அதிகாரங்கள் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான அதிகாரம் மிகவும் குறைவாகவே உள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வார்டு வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை தேர்வு செய்யக் கூடிய உரிமை கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்றும், குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆக, மக்களுக்கான அடிப்படை சேவைகளைக் கண்காணிப்பதும், அவற்றில் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பிரதான கடமைகளை நிறைவேற்றும் கவுன்சிலர்களுக்கு மாமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாளில் ரூ.800 படியாக வழங்கப்படுவதைத் தவிர வேறு ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை.

புகார் தெரிவிக்க... எனினும், வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களுக்கான கமிஷனாக கவுன்சிலர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தவிர வீடுகள், வணிக நிறுவனங்களுக்காகக் கட்டடம் கட்டும் பொதுமக்களிடம் இருந்து பெரும் தொகையை கவுன்சிலர்கள் வசூல் செய்கிறார்கள் என்ற புகாரும் தொடர்ந்து உள்ளது.

இவ்வாறு முறைகேடான செயல்களில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் அளித்து, பொதுமக்கள் உரிய நிவாரணம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com