தஞ்சாவூர், அக். 29: 20 சதம் வரை ஈரப் பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 20 சதம் ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்டோபர் 1-ம் தேதி முதல் 17 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்தது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 22 சதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மேலும், இதை வலியுறுத்தி, வரும் 31-ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் அறிவித்
தனர்.
இதற்கிடையே, 20 சதம் வரை ஈரப் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரனிடம் கேட்டபோது அவர் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 முதல் 20 சதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. மாவட்டத்தில் 237 நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள உள்ளன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்து 3 உயர் அலுவலர்கள் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் நெல் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, அங்கு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், ராமநாதபுரம், சேலம், தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பும் பணியை விரைவுபடுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த முடியாமல் விவசாயிகள் சிரம்படுகின்றனர்.
தற்போது வெயில் இருப்பதால் விவசாயிகள் நெல்லை உலர்த்துகின்றனர்.
தடையில்லாமல் நெல் கொள்முதல் செய்ய வசதியாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கூடுதல் தொகை அளிக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் பாஸ்கரன்.
விவரம் தர மறுத்த அலுவலர்:
முன்னதாக, இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் (எஸ்.ஆர்.எம்.) ஆர். பிச்சையாவிடம் கேட்டபோது, தனக்கு இதுகுறித்து ஒன்றும் தெரியாது என்றும், மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, மேற்கண்ட தகவலைத் தெரிவித்தாலும், 20 சத ஈரப்பத அனுமதியை அளித்தது மத்திய அரசா, மாநில அரசா என்ற கேள்விக்கு விவரத்தை முதுநிலை மண்டல மேலாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதத்துக்கு கூடுதலாக 20 சதம் வரை ஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டதால், இதற்காக கொள்முதல் விலையில் பணப் பிடித்தம் செய்யப்படுமா? என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.