சென்னை, செப். 11: பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்க வசதியாக சாய்வுத் தளங்களை அமைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பான்மையான பள்ளி, கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். அவர்கள் சாதாரண படிக்கட்டுகளில் ஏறி வகுப்பறைகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
சென்னையில் உள்ள பல தனியார் வர்த்தக நிறுவன வளாகங்களிலும், திரையரங்குகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக சாய்வுத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல கல்வி பயில வரும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சாய்வுத் தளங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோஃபியா (மாற்றுத் திறனாளி): நான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறேன். அந்தக் கல்லூரியின் 2-வது தளத்தில் என்னுடைய வகுப்பறை உள்ளது. மாற்றுத் திறனாளி என்பதால் என்னுடைய ஆட்டோ கல்லூரி வளாகத்தின் உள்ளே வர அனுமதி உண்டு. ஆனால், இரண்டு கால்களும் செயலற்று உள்ள என்னால் 2-வது தளத்தில் உள்ள வகுப்பறைக்கு எவ்வாறு செல்ல முடியும்?
ஒவ்வொரு நாளும் என் நண்பர்கள் எனக்காக காத்திருந்து வகுப்பறைக்கு அழைத்து செல்வார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கும். இதற்குப் பதிலாக சாய்வுத் தளத்தை அமைத்திருந்தால் நானே என்னுடைய ஊன்றுகோல் உதவியுடன் வகுப்பறைக்கு சென்றிருப்பேன்.
கல்லூரியோ, பள்ளிகளோ கட்டப்படும்போது எங்களை போன்ற மாற்றுத் திறனாளிகளின் நிலைமையையும் மனதில் வைத்துக் கொண்டு சாய்வுத் தளங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதுபோன்ற சாய்வுத் தளங்கள் அமைப்பதன் மூலம் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் பயன் பெறுவார்கள். சில தனியார் பள்ளி, கல்லூரிகளில் சாய்வுத் தளமும், லிப்ஃட் வசதியும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் வசதியானவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களிலேயே கிடைக்கின்றன என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளியின் தந்தை கோபாலன்: புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எனது மகன் விஜயகுமார் 10-ம் வகுப்பு படிக்கிறார். அவரின் வகுப்பறை 4-வது தளத்தில் உள்ளது. என் மகனைப் போன்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பலர் இப்பள்ளியில் படிக்கின்றனர்.
இவர்கள் ஊன்றுகோலின் உதவியுடன்தான் மாடிப்படிகளில் ஏறுகின்றனர் அல்லது பெற்றோர்கள் இவர்களை வகுப்பறைகளுக்கு தூக்கிச் சென்று விட்டுவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் சாய்வுத் தளங்கள் அமைப்பதின் மூலம் மாற்றுத் திறனாளிகள் தாங்களாகவே தங்களுடைய பணிகளை செய்து கொள்வதுடன் அவர்களின் தன்நம்பிக்கையும் வளரும் என்றார் அவர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலர் நம்புராஜன்: 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோர் சமவாய்ப்பு மற்றும் முழுப் பங்கேற்பு சட்டத்தின்படி அனைத்துப் பொது இடங்கள், பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சாய்வுத் தளங்கள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை.
பல தனியார் வணிக வளாகங்கள் லாப நோக்கத்துடன் இயங்கினாலும் அவர்கள் சாய்வுத் தளங்களை அமைத்துள்ளனர். ஆனால், அரசு பள்ளி, கல்லூரிகளிலேயே சாய்வுத் தளங்கள் அமைக்கப்படாதது வேதனைக்குரியது. பள்ளி மற்றும் கல்லூரி கட்டுபவர்கள் சிறிதாவது மாற்றுத்திறனாளிகளை குறித்து யோசிக்க வேண்டும். இதற்கு, முதலில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாழ்வுத் தளம் அமைத்து மற்ற தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பு என்றார் நம்புராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

