கடலில் வீணாகும் பாசன நீர்

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள (வாய்மேடு- தென்னடார்) நீர்த்தேக்க படுகை அணைப் பகுதியில் ஏற்பட்ட உடைப்பு அடைக்கப்படாததால், இதன் வழியாக வெளியேறும் மேட்டூர் பாசன நீர் வீணாகக் கடலுக்குச்
கடலில் வீணாகும் பாசன நீர்
Updated on
1 min read

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள (வாய்மேடு- தென்னடார்) நீர்த்தேக்க படுகை அணைப் பகுதியில் ஏற்பட்ட உடைப்பு அடைக்கப்படாததால், இதன் வழியாக வெளியேறும் மேட்டூர் பாசன நீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது.

 வேதாரண்யம் பகுதியில் கடந்த சில மாதங்களாகப் போதிய மழை இல்லாத நிலை தொடர்கிறது. இதனால், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

 மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில் வழக்கமாக 10,250 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி நேரடி விதைப்பு முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். நிகழாண்டில் இதுவரை சுமார் 600 ஹெக்டேரில் மட்டுமே நேரடி விதைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

 இந்த நிலையில், தொடர்ந்து வறண்ட வானிலையே நீடித்து, வயலில் விதைப்புக்கான ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால், நெல் சாகுபடிப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 இங்கு முறையாகப் பராமரிக்கப்படாத பாசன, வடிகால் ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் குறைந்த அளவு தண்ணீரும் விவசாயிகளுக்கு முழுமையான பயனைத் தரவில்லை. உதாரணமாக, திருத்துறைப்பூண்டியிலிருந்து வாய்மேடு வழியாகக் கடலில் இணைகிறது முள்ளியாறு. இந்த ஆறு கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலவே உமரி, வேலிகாட்டாமனக்கு, வெங்காயத்தாமரை போன்றவற்றுடன் பராமரிப்பின்றி உள்ளது.

 குறிப்பாக, வாய்மேடு- தென்னடார் பகுதியில் முள்ளியாற்றின் குறுக்கே உபரி நீரைத் தேக்கும் படுகை அணை உள்ளது. இது, இந்தப் பகுதியில் செயல்படும் அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டத்துக்கு பயன்படும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது.

 இந்த அணையின் அருகே கடந்த ஆண்டில் (அக்.- நவ.) ஏற்பட்ட உடைப்பு இதுநாள்வரை அடைக்கப்படவில்லை. இதனால், பாசனத் திட்டத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில், தண்ணீர் உடைப்பின் வழியாக வெளியேறி வீணாகக் கடலுக்குச் செல்கிறது.

 இந்த பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com