சிந்தைக்கினிய தில்லைக் கலம்பகம்

கலம்பகத்துக்கு இரட்டையர் என்பார்கள். இளஞ்சூரியன், முதுசூரியன் என அழைக்கப்படும் இரட்டைப் புலவர்கள் அருளிய நூல் 'தில்லைக் கலம்பகம்'. வரலாற்று முறையில் நந்திக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம
சிந்தைக்கினிய தில்லைக் கலம்பகம்

கலம்பகத்துக்கு இரட்டையர்'' என்பார்கள். இளஞ்சூரியன், முதுசூரியன் என அழைக்கப்படும் இரட்டைப் புலவர்கள் அருளிய நூல் "தில்லைக் கலம்பகம்'.

வரலாற்று முறையில் நந்திக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் இவைகளுக்குப் பின் வந்ததாயினும், தில்லைக் கலம்பகத்துக்கு இலக்கியத்திலும், இறைமையிலும் ஒரு தனியிடம் உண்டு.

பலவண்ண மலர்கள் கட்டிய மாலையை கதம்பமாலை என்று சொல்வதுபோல், வெண்பா, விருத்தம், அகவல், ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கட்டளைக் கலித்துறை என, பற்பல பாவகைகளால் தொடுக்கப்பட்டதே கலம்பகம் என்ற சிற்றிலக்கியம்.

நடராஜர் பெருமையிலும், அவர் திருக்கோயில் கொண்டருளிய சிதம்பரத்தின் தலச் சிறப்பைப் போற்றும் வகையில் தலத்தின் பெயரைக்கொண்டு தில்லைக் கலம்பகம் பாடப்பட்டுள்ளது. இந்நூலில், சிதம்பரத்தில் திகழும் சபைகள், மண்டபங்கள், தீர்த்தங்கள், மூர்த்திகள், தில்லை மூவாயிரவர், பூஜை முறை மற்றும் சங்க இலக்கியம் சார்ந்த சில அகப்பொருள் துறைகளும் கூறப்பட்டுள்ளன.

இரட்டையரின் இணையிலா சிவபக்தியையும், செந்தமிழ்ப் புலமை வளத்தையும், சிவத்தல வரலாற்றுக் குறிப்புகளையும் தில்லைக் கலம்பகம் நம் கண்முன் உயிரோவியங்களாய் காட்டி உவகையூட்டுகிறது. அற்புதத் தனிக்கூத்தாடும் அம்பலவாணர் எழுந்தருளிய இத்தலம் மன்றம், திருச்சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், கனகசபை இன்னும் பல திருப்பெயர்களால் பாராட்டப்படுகிறது.÷

"மன்றம்' என்பது சிதம்பரம் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்; "சிற்றம்பலம்' என்பது சிதம்பர ரகசியம் உள்ள பகுதி; "பொன்னம்பலம்' என்பது சபையின் பொன் ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரை; "பேரம்பலம்' என்பது சிவகாமி சமேத நடராஜருக்குச் சாத்தப்படும் அணிகலன்கள் வைக்கப்படும் பகுதி; "கனகசபை' என்பது சித்திர மண்டபம் என தொன்று தொட்டு சொல்லப்படுகிறது.

""சீர்கொண்ட மன்றம் என்றும்

திருச்சிற்றம்பலம் என்றும்

ஏர்கொண்ட பொழில் தில்லை

எழில் பொன்னம்பலம் என்றும்

வார்கொண்ட முலை உமையாள் வாழ்

பேரம்பலம் என்றும்

பேர்கொண்ட கனகசபைப்

பெரும்பற்றப் புலியூரோய்!''

(தி.க.பாடல்-1)

ஒருமைப் பெருமானை இருமைப் பெயர்களுடன் தொடர்புபடுத்தி, அருமைத் திருநடனக் காட்சியை ஒருபாடல் கலைநயத்துடன் காட்டுகிறது.

நடராஜர் திருச்செவிகளில் அசுவதரர், கம்பளர் என்னும் இரண்டு கந்தர்வர்கள் குண்டலங்களாக விளங்கி சாமகானம் பாடிய வண்ணம் உள்ளனர். அவர்களின் இசை கேட்டு பெருமான் தலை அசைத்தபடி உள்ளாராம்.

""அசைந்த தோடும் சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன்'' என்று திருப்புகழ் போற்றுகிறது. மேலும், ""பண் உலாம் இருவர் இசை கொள் நின் செவியில்'' என்று சோணசைல மாலையும், ""கந்தருவரை இரு காதில் சேர்த்தனை'' என்று புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) கலம்பகமும் பரமசிவனாரின் பரம ரசிகத் தன்மையைப் பாராட்டுகின்றன.

செவியில் கந்தருவகானம் தேனாகப் பாய்ந்திட திகழும் நடராஜரை முதன் முதலில் தரிசித்தவர்கள் வியாக்கிரபாதர் - பதஞ்சலி முனிவர்கள். பக்திப் பண்ணையாகிய சிதம்பரத் தலத்தில் முதலில் ஞானப்பயிர் விளைவித்தவர்கள் இவ்விருவரே ஆவர். ""பாம்பும் புலியும் தேடிப் பார்த்து பயிரிட்டது'' என்பது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. வித்யா மதம், தன மதத்தினால் தரிசிக்க இயலாதவர்கள் நான்முகனும் திருமாலும் ஆவர். தாய்ப்பாலை உண்ணாதவர் தவஞானி உபமன்யு முனிவரும், சிவஞானி திருஞானசம்பந்தரும் ஆவர். தாயினும் நல்லன் சிவபெருமானுக்கு இரு நாயகியர் உமையும், கங்கையும் ஆவர்.

ஆக, இரண்டிரண்டாக அழகுற, கவிநயமுற வெளிப்படுத்துகிறது தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று. சுருதிக்கும் தாளத்துக்கும் ஒத்துவரும் இசைவண்ணம் நிரம்பிய பாடல்:

""காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;

ஏதிலராய்க் காணார் இரண்டு பேர் - பேதை முலை

உண்ணார் இரண்டுபேர்; ஓங்கு புலியூரருக்குப்

பெண்ணான பேர் இரண்டு பேர்''

(பா.8)

வழிவழியாக பூஜை செய்யும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது என்றும், அவர்கள் மூவாயிரம் பேர்கள் என்றும், அவர்கள் பின்பற்றும் சிவாகமத்தின் பெயர் "மகுடாகமம்' என்றும், சிதம்பரம் மிகப் பழமையான தலம் என்றும் தில்லைக் கலம்பகம் பாடல்கள் வழி அறியமுடிகிறது.

""தில்லை மூவாயிரம் பூசை புரிபாதம்''

(பா-18)

""சல்லாபம் தரும் மகுடாகமும் தொல்லை;

தலபுராணமும் தொல்லை; சபையும் தொல்லை;

சொல்லாரும் நான்மறையும் தொல்லை;

தில்லை சோதி நடமாடுவதும் தொல்லைதானே''

(பா-69, தொல்லை-பழைமை)

எழுதாக் கிளவியை வேதம் என்றும், எழுதும் மறையை தேவாரம் என்றும், உபமன்யு முனிவர் வேதம் ஓதி வழிபட்டவர் என்றும், சீர்காழி முனிவர் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடி வழிபட்டார் என்றும், இவ்விரு மகான்களின் இனிய திருவடிகள் எளியேன் சிரத்தின் மேல் என்றும் இருக்க வேண்டும் என்றும் கலம்பக இரட்டையர் தோத்திரம் புரிந்துள்ளது மிகச்சிறப்பாகும். அதை விளக்கும் பாடல் வருமாறு:

""எழுதாக்கிளவி இருடி பகர்ந்ததும்

எழுதுமறை பகர்ந்த கழுமல முனிவன்

...... ......... ............

இருடிகளாகிய ஈங்கிவர் இருவர்

திருவடி நான்கும் சிரத்தின் மேலனவே''

(பா-12)

""சாத்திரங்கள் இறைவன் உள்ளான் என்பதை நிலைநாட்டும்; ஆனால், தோத்திரங்கள் இறைவனையே காட்டும்'' என்பது சான்றோர் வாக்கு. சான்றோர் வாக்குக்கிணங்க இரட்டையர் செய்துள்ள தில்லைக் கலம்பகம் தில்லை ஈசனையே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com