

ஈரோடு: காவிரி ஆற்றில் ஆகாயத் தாமரை ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சேலம் மாவட்டம், மேட்டூர் முதல் ஈரோடு மாவட்டம், வெண்டிப்பாளையம் வரை 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையங்களின் திறன் வீணாகிறது. இதனால் தினசரி 150 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, அக்ரஹாரம், வெண்டிப்பாளையம் ஆகிய 6 இடங்களில் தலா ரூ. 400 கோடியில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தலா 30 மெகாவாட் வீதம் மொத்தம் 180 மெகாவாட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இந்த நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, ஆகாயத் தாமரை, குதிரைக்குளம்பு உள்ளிட்ட களைச்செடிகள் மின் உற்பத்திக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.
நீர் மின் உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் வரும் வழியில் இந்தக் களைச்செடிகளும் காவிரி ஆற்றில் வீசப்படும் இதர கழிவுகளும் அடைத்துக் கொள்வதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, பகல் நேரங்களில் மின் வாரிய அதிகாரிகள் கூலியாட்களைப் பணியில் அமர்த்தி, ஆகாயத் தாமரையை அகற்றி வந்தனர்; இருப்பினும் தொடர்ந்து அகற்ற முடியவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் ஆகாயத் தாமரையை அகற்ற முடியாததால், இரவில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இப்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால் ஆகாயத் தாமரை அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியது: காவிரி ஆற்றில் 15,000 கனஅடி தண்ணீர் வரும்போது இந்த 6 மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து 90 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 1,500 கனஅடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், 30 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.
மேட்டூர் முதல் ஈரோடு மாவட்டம் வரை உள்ள மேட்டூர், பவானி, குமாரபாளையம் நகராட்சிகள், ஈரோடு மாநகராட்சி உள்பட 30-க்கு மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் காவிரி ஆற்றில் சேர்கின்றன. ஆகாயத் தாமரை, குதிரைக்குளம்பு உள்ளிட்ட செடிகள், இந்தக் கழிவுகளை உறிஞ்சி வேகமாகப் பரவுகின்றன. காவிரி ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இது குறித்து நீர் மின்திட்ட உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஆகாயத் தாமரையை அகற்ற ஒரு நாளுக்கு ஒரு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மட்டும் ரூ. 3,000-க்கு மேல் செலவாகிறது. பகல் நேரங்களில் மட்டும்தான் அவற்றை அகற்ற முடிகிறது. எத்தனை முறை அகற்றினாலும் ஓரிரு நாட்களில் வேறு பகுதிகளிலிருந்து ஆகாயத் தாமரைச் செடிகள் பரவி வந்துவிடுகின்றன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.