

ஈரோடு: ஈரோட்டின் கல்விக் களஞ்சியமாக உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் 1954-ல், ஈரோடு, சத்தி சாலையில் உள்ள சூளையில் மகாஜன கல்லூரி என்ற பெயரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் சிக்கய்ய நாயக்கர் மகாஜன கல்லூரி என்றும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாறியது.
52 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் இக்கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராக பெரியார் பணியாற்றியுள்ளார். இப்போது இக்கல்லூரி கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை பாதுகாவலராகக் கொண்டு இயங்கி வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக் களஞ்சியமாக இக்கல்லூரி திகழ்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தான்.
இக் கல்லூரியின் நிர்வாகிகள் கல்லூரிக்கான அனுமதியை உயர்கல்வித் துறையிடம் புதுப்பிக்கத் தவறியதாலும், நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாலும், 19.12.2002 முதல், தமிழ்நாடு தனியார் ஒழுங்காற்றுச்சட்டம் 1976 பிரிவு 14ஏ-ன்படி கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டுக்கு கல்லூரி கொண்டுவரப்பட்டது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் வரையிலும் நிராகரிக்கப்பட்டது. இப்போதும் தொடர்ந்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில்தான் கல்லூரி இயங்கி வருகிறது. ஆனால், அரசுக் கல்லூரி எனறு இதை அறிவிக்காததால் பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
கல்லூரியில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்குப் பதிலாக புதிதாக பணி நியமனம் செய்ய முடிவதில்லை. இதனால், மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது.
இங்கு 11 இளங்கலைப் படிப்புகள், 3 முதுகலைப் படிப்புகள் உள்ளன. இப்போது 1,500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் கல்லூரியில் 400 புதிய மாணவ மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே இங்கு வசூலிக்கப்படுவதால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வேறு அரசு கலைக் கல்லூரிகள் இல்லை. எனவே, இக்கல்லூரியை இந்த ஆண்டிலாவது அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இப்போது, இது அரசு உதவி பெறும் கல்லூரியா, அரசுக் கல்லூரியா என்று கூறமுடியாதபடி திரிசங்கு நிலையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இக் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும். ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு இது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி கிளை செயலர் ப.கமலக்கண்ணன் கூறியது:
கல்லூரியில் மொத்தமுள்ள 83 ஆசிரியர் பணியிடங்களில் இப்போது 49 பேர் மட்டுமே உள்ளனர். இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற துறைகளில் அனுமதிக்கப்பட்டதைவிட பாதி எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தமுள்ள 52 அலுவலகப் பணியாளர் பணியிடங்களில் 23 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. ஏழை மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், கல்லூரிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துகள் பாதுகாக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.