மத்திய சிறைகளில் "பேக்கேஜ் ஸ்கேனர்' கருவி

சென்னை, ஆக. 9: தமிழக சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை சய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பேக்கேஜ் ஸ்கேனர் கருவி நிறுவப்பட உள்ளது. இதற்கான திட்டத்தை சிறைத்துறை தயாரித்துள்ளது. மாநில உள்த
மத்திய சிறைகளில் "பேக்கேஜ் ஸ்கேனர்' கருவி
Updated on
2 min read

சென்னை, ஆக. 9: தமிழக சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை சய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பேக்கேஜ் ஸ்கேனர் கருவி நிறுவப்பட உள்ளது. இதற்கான திட்டத்தை சிறைத்துறை தயாரித்துள்ளது. மாநில உள்துறை அனுமதி கிடைத்தவுடன், இது செயலுக்கு வரும் என்று தெரிகிறது.

 தமிழக சிறைத்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் மத்திய சிறை- 9, மாவட்டச் சிறை- 9, துணை சிறை- 94, திறந்தவெளி சிறை- 2, பெண்கள் சிறை- 3 ஆகியவை உள்ளன. இவற்றில் விசாரணைக் கைதி, தண்டனைக் கைதி என சுமார் 14 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

 மத்திய சிறைகள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தாலும் அண்மைக்காலமாக சிறைக்குள் செல்போன், கஞ்சா கடத்தப்படுவதாகவும், திருட்டு சி.டி., பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் புழங்குவதாகவும் பரவலாக புகார்கள் எழுந்தன.

 சிறைக்கைதிகளிடமும், கைதிகளைப் பார்க்க வருபவர்களிடமும் இன்னும் சொல்லப்போனால் சிறைக் காவலர்களிடமும் அவ்வப்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கடத்தலுக்கு சிறைத்துறை அதிகாரிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் செல்போன், கஞ்சா கடத்தல் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

 சிறைக்குள் செல்போன் பேசுவதைத் தடுக்க "ஜாமர்' கருவி பொருத்துவது குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், "ஜாமர்' பொருத்துவதற்கு அதிக செலவாகும் என்பதோடு, "ஜாமர்' செயல்படும்போது அந்தப் பகுதி முழுவதும் செல்போன் சேவை முடங்கும் என்பதால் சிறைத்துறை அதிகாரிகள் இத் திட்டத்தை கைவிட்டதாகத் தெரிகிறது.

 இதைத் தொடர்ந்து 9 மத்திய சிறைகளிலும் "பேக்கேஜ் ஸ்கேனர்' கருவியைப் பொருத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மாநில உள்துறையின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 முதல் கட்டமாக சென்னை புழல் மத்திய சிறையிலும், வேலூர் மத்திய சிறையிலும் இந்த ஸ்கேனர் கருவியை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இவை அனைத்து மத்திய சிறைகளிலும் இவை நிறுவப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 கைதிகள் கொண்டு வரும் பொருள்கள், கைதிகளைப் பார்க்க வருகிறவர்கள் கொண்டு வரும் பொருள்கள் மற்றும் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பேக்கேஜ் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப்படும்.

 அதோடு மட்டுமன்றி பணிக்கு வரும் சிறைக் காவலர்களின் பொருள்களையும் சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 சிறைக் காவலர்கள் சிலர் வெளியில் இருந்து சிறைக்குள் பொருள்களை கடத்திச் சென்று கைதிகளிடம் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருவதால், அவற்றை தடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 இச்சோதனையில் வழக்கமான பணியில் ஈடுபடும் காவலர்களைப் பயன்படுத்தாமல் வேறு பிரிவைச் சேர்ந்த காவலர்களை பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அதிகாரிகள் சிந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கைப்பை, சூட்கேஸ் மற்றும் பெரிய அட்டை பெட்டி பார்சலுக்குள் ஊடுருவி அதில் உள்ள பொருள்களை துல்லியமாக கணினியில் தெளிவாக பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது "பேக்கேஜ் ஸ்கேனர்' கருவி.

 விமான நிலையங்கள், துறைமுகங்கள், முக்கியமான திருக்கோயில்களில் இத்தகைய ஸ்கேனர் கருவிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com