

செங்கல்பட்டில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பதிவு செய்து 60 நாள்கள் வரை ஆகியும், பல இடங்களில் சிலிண்டர் கிடைக்காததால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டில் பாரத், இண்டேன், இந்துஸ்தான் ஆகிய சமையல் எரிவாயு நிறுவனங்களின் நான்கு விநியோக ஏஜென்சிகள் உள்ளன.
இவை, செங்கல்பட்டு மற்றும் சுற்றி உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்கின்றன. தற்போது இப்பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பதிவு செய்து 60 நாள்களாகியும் சில இடங்களில் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை என மக்கள் கூறுகின்றனர். கிராமங்களுக்கும் இலவச சிலிண்டர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதால், கிராம பெண்களும் இயற்கை முறையில் அடுப்பெரிப்பதை தவிர்த்து விட்டனர்.
அதேவேளையில், ரேஷன் கடைகளிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளது. எனவே, அவர்களும் புதிய சிலிண்டர் வாங்குவதற்காக காலி சிலிண்டர்களை தலையில் சுமந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏஜென்சிகளுக்கு நடந்து செல்கின்றனர்.
இருப்பினும், புதிய சிலிண்டர் கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.
இதுகுறித்து எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:
காஸ் ஏஜென்ஸிகளுக்கு தொலைபேசியில் பதிவு செய்யலாம் என்றால் போனை எடுப்பதே இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பலனில்லை. நேரில் பலமுறை நடந்தாலும் அலைக்கழிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. கடும் சிரமப்பட்டு பதிவு செய்தாலும் சிலிண்டர் கிடைக்க 60 நாள்களுக்கும் மேலாகி விடுகிறது என்றனர்.
÷இது குறித்து ஏஜென்சிகளிடம் கேட்கும்போது, அரசின் நடைமுறைகளை முறையாக பின்பற்றுகிறோம். அரசின் இலவச சிலிண்டர் வைத்திருந்தாலும், பணம் செலுத்தி இணைப்பு வாங்கியிருந்தாலும், கூடுதல் சிலிண்டர் வாங்கி இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரி தான் விநியோகம் செய்ய முடியும். எங்களுக்கு போதிய விநியோகம் இல்லை. மேலும் எண்ணெய் நிறுவனங்களிடம், ஏஜென்ஸிகள் தங்களின் குறைகளை கூறமுடிவதில்லை என்றனர்.
÷செங்கல்பட்டு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க, எரிவாயு ஏஜென்சிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர் விநியோகம் நடைபெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கடைகளுக்கு மட்டும் தாராளம்...
வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள ஓட்டல், டீக்கடை, துரித உணவகம் போன்ற கடைகளில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தாராளமாக பயன்பாட்டில் உள்ளன.
பெயருக்கு ரூ.1,300 வர்த்தக சிலிண்டர் ஒன்று மட்டும் வாங்கிக் கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களை தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஏஜென்சி ஊழியர்களும் உடந்தையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.