சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டுமானப் பணிகளில் தொடரும் குளறுபடிகள்

வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில் ரூ. 25 கோடியில் புதிதாக கட்டப்படும் 10 மாடி கட்டட அலுவலகத்துக்கு
சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டுமானப் பணிகளில் தொடரும் குளறுபடிகள்
Updated on
2 min read

சென்னை எழும்பூர் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்படும் சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டடத்தின் திட்டத்தை அதிகாரிகளின் விருப்பத்துக்கேற்ப அடிக்கடி மாற்றுவதால் அரசு பணமும் காலமும் வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் இடநெருக்கடியின் காரணமாக வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில் ரூ. 25 கோடியில் புதிதாக கட்டப்படும் 10 மாடி கட்டட அலுவலகத்துக்கு விரைவில் இடம் பெயருகிறது. அதேவேளையில் கிண்டி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு இப்போதுள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டடம் ரூ.10.20 கோடியில் 50 ஆயிரம் சதுர அடியில் 5 மாடி கட்டடமாக கட்டப்படுகிறது. முதலில் இந்தக் கட்டடம் 70 ஆயிரம் சதுர அடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 70 ஆயிரம் சதுர அடியில் கட்டடம் கட்டுவதற்கு சென்னை பெருநகர காவல்துறை அலுவலகத்தின் சுமார் 156 ஆண்டுகால பாரம்பரிய கட்டடத்தின் ஒரு பகுதியை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அரசு அத் திட்டத்தை கைவிட்டது.

இந்த புதிய கட்டடத்தில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் தவிர,  சைபர் குற்ற ஆய்வகம், பொருளாதார குற்றப்பிரிவு, ரயில்வே காவல்துறை, போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு,  நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைகின்றன.

இதில் தரைதளத்தில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகங்கள் அமைகின்றன. முதல் தளத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் அலுவலங்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டாவது தளத்தில் எஸ்.பி. அளவிலான அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. மூன்றாவது தளத்தில் நிர்வாகப் பிரிவு அலுவலங்கள் அமைக்கின்றன. நான்காவது தளத்தில் பொருளாதார குற்றப்பிரிவு, சைபர் குற்ற ஆய்வகம், சிறப்பு புலனாய்வு பிரிவு, நூலகம் ஆகியவை அமைகின்றன.

 ஐந்தாவது தளத்தில் ரயில்வே காவல்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவை அமைகின்றன.

இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணி 2010-ம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டடத்தை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக மூலம் தனியார் கட்டுமான நிறுவனம் கட்டி வருகிறது. கட்டுமானப் பணியை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில மாதங்களாக பணியும் வேகப்படுத்தப்பட்டு வந்தது. மணல் தட்டுப்பாடு, கட்டுமான பொருள்களின் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளுக்கும் இடையேயும் இந்த கட்டடம் எதிர்பார்த்ததைவிட வேகமாக கட்டப்பட்டு வந்ததாக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக கட்டடத்தின் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இப்போது கட்டடத்தின் உள்பகுதியை அழகுப்படுத்துவது, பெயின்ட் அடிக்கும் பணி, வயரிங் வேலை ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த கட்டடத்தின் அமைப்பு அங்கு அமையவுள்ள காவல்பிரிவு உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஏற்கெனவே போடப்பட்ட திட்டத்தில் மாற்றங்களுடன் கட்டப்பட்டு வந்தது.

குறிப்பாக உயர் அதிகாரிகள் கட்டடத்தின் பின்பகுதியில்தான் தங்களுக்கு அறை ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியதால், அதற்கு ஏற்றார்போல கட்டடத்தின் உள்பகுதி வடிவமைக்கப்பட்டு, அறைகள் கட்டப்பட்டன. இந்நிலையில் இப்போது மீண்டும் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்பு இருந்த அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்ட பின்னர்,   புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் அண்மையில் புதிய அலுவலக கட்டடத்தின் பணியைப் பார்வையிட்டனர்.  அதிகாரிகளுக்கான அறைகள் முன்பகுதியில்தான் வேண்டும் எனவும், பின் பகுதியில் ஏற்கனவே அதிகாரிகளுக்கு கட்டப்பட்டிருக்கும் அறைகள் வேண்டாம் எனவும் கூறிவிட்டனராம்.

விரயமாகும் பணம்: தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தினர் வேறு வழியின்றி இப்போது அதிகாரிகளுக்காக பின்பகுதியில் கட்டப்பட்ட அறையை, முன் பகுதிக்கு மாற்றி வருகின்றனராம். இதனால் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டிருந்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இன்னும் கட்டடம் கட்டும் பணியை முடிக்க 6 மாதங்களுக்கு மேலாகும் என வீட்டு வசதி கழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி திட்டத்தை மாற்றியதால், ஏற்கெனவே போடப்பட்டிருந்த திட்ட மதிப்பீட்டை தாண்டி மேலும் பல லட்சம் செலவாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  இதனால் காலம் விரயமாவதோடு மட்டுமன்றி அரசின் பணமும் விரயமாவதாக கூறப்படுகிறது.

இப் பிரச்னையில் வீணாவது அரசின் பணம் அல்ல மக்களின் வரிப் பணம் என்பதை காவல்துறை அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com