9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,600 இடைநிலை
Updated on
2 min read

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்ற அதே மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் மாவட்டத்துக்குள் பணி நியமன கலந்தாய்வும், மாலையில் வெளி மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வழங்கியுள்ள முகவரியின் அடிப்படையில், அவரவர் சொந்த மாவட்டங்களில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வில் 6,592 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் கிடைக்காதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடங்களை விரும்புவோருக்கும் திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 2,035 பேர் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு மாநில அளவில் நடைபெற்றதால் அதிக நேரம் ஆனது.

திங்கள்கிழமை இரவு வரை இரண்டு நாள்களிலும் சேர்த்து 8,500-க்கும் மேற்பட்டோர் பணியிடங்களைத் தேர்வு செய்ததாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 13-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இடைநிலை ஆசிரியர்கள்... இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காமல் இருந்த 113 இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சான்றிதழ்களை திங்கள்கிழமை நேரில் சமர்ப்பித்தனர்.

வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழோடு வந்த இவர்களின் பெயர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.பி.ஐ. வளாகத்தில் பரபரப்பு: இறுதித் தேர்வுப் பட்டியலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள் ஆகியோர் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் அதிக எண்ணிக்கையில் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏராளமானோர் ஒரே நாளில் குவிந்ததால் அவர்களை வரிசையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தகுதியானவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டும், மீதமுள்ளவர்கள் திருப்பியும் அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வு வாரியத்தின் மீது புகார்: தேர்வு வாரிய அதிகாரிகள் தங்களது மனுக்களை பொறுமையோடு பரிசீலிக்கவில்லை என்று பட்டதாரிகள் தெரிவித்தனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றும் அவர்களில் சிலர் தெரிவித்தனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: இதனிடையே, 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான இறுதிப்பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அட்டவணை
கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் விவரம்:

1. சென்னை - எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.

2. கடலூர் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர்.

3. காஞ்சிபுரம் - டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

4.  திருவள்ளூர் -  ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

5. விழுப்புரம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், விழுப்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com