புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு

கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில்
புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு
Published on
Updated on
2 min read

குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, எம்.சக்திவேல், எம்.ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது:

கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது.

புறக்கடையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் இனப் பெருக்கத்துக்காக எந்தவொரு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் பலமுள்ள சேவல்கள் மூலமாகவே இனப் பெருக்கத்துக்கு தயாராகின்றன.

இதற்காக உடல் எடையின் அடிப்படையில் சேவல்களைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

முட்டை சேகரித்தல்..: பெட்டைக் கோழிகள் 20 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே முட்டையிடும். எனவே, காலையில் இரண்டு முறையும், பகலில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் முட்டைகளைச் சேகரிக்க வேண்டும்.

முட்டைகளை உப்புச் சட்டியில் அல்லது அரிசிப் பானைகளில் அடைத்து வைக்கக் கூடாது. இதனால், சுமார் 50 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும். முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க, இரும்புச் சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கைப் போட வேண்டும். பிறகு முட்டைகளை அதன் மேல் வைத்து பருத்தித் துணி கொண்டு மூடவேண்டும். இதன் மூலம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவீதம் வரை இருக்கும்.

அடை வைத்தல்..: மூங்கில் கூடைகள் அல்லது அகலமான இரும்புச் சட்டியைப் பயன்

படுத்தி அடை வைக்கலாம். அடை வைக்கும் கூடையை ஒரு அறையின் இருண்ட பகுதியிலேயே வைக்க வேண்டும். வெளிச்சம் அதிகம் இருந்தால் கோழிகள் சரியாக அடைக்கு உதவாது.

மேலும், கோழிகளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். அதிகமான முட்டைகள் வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன்  குறையும்.

அடை காக்கும் கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோழிகளை தினமும் சிறிது நேரம் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும். அடை வைத்த 7ஆம் நாள் முட்டைகளில் கரு கூடிவிட்டதா எனக் கண்டறிந்து, கரு கூடாத முட்டைகளை உணவுக்காகப் பயன்படுத்தலாம். 

தீவனப்  பராமரிப்பு..: புறக்கடை முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில நேரங்களில் போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் போகக்கூடும்.

எனவே, மேய்ச்சலால் கிடைக்கும் உணவுப் பொருள்களுடன் கோழிகளுக்குக் குருணை அரிசி, தானியங்கள், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமக் கலவைப் பொருள்களையும் தர வேண்டும். மேலும், புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குப் புரதச் சத்து நிறைந்த தீவனமாக உள்ள பானைக் கரையான், அசோலா ஆகியவற்றையும் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com