தொழிலாளர்கள் ஸ்டிரைக்: 1 லட்சம் ஏக்கர் கரும்பு வீணாகும் அபாயம்

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 1 லட்சம் ஏக்கர் கர
தொழிலாளர்கள் ஸ்டிரைக்: 1 லட்சம் ஏக்கர் கரும்பு வீணாகும் அபாயம்
Updated on
2 min read

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 1 லட்சம் ஏக்கர் கரும்பு வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரும்பு ஆலைகளில் அரவை நிறுத்தப்பட்டுள்ளதால், நாளொன்றுக்கு சுமார் ரூ. 8 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 41 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில் 17 ஆலைகள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள். அவற்றில் மொத்தம் 5,650 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலைகள் தர்மபுரி, வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை, தஞ்சை, பெரம்பலூர், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றிவரும் கண்காணிப்பு அலுவலர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தொழிலாளர்களும், ஊழியர்களும் கடந்த 11 ஆம் தேதி முதல் காலம்வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 31.3.2008-ல் முடிவடைந்தது. அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை 1.4.2008 முதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் கடந்த ஆண்டு மார்ச்சில் தொழில் துறை, நிதித்துறை மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. எனவே, தொழிலாளர்களும், ஊழியர்களும் இப்போது வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

""எங்களுடன் வேலை செய்யும் கண்காணிப்பு அலுவலர்களுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களில் 35 ஆண்டுகள் வரை வேலை செய்த தொழிலாளர்கள் ரூ. 13 ஆயிரத்தைக் கூட தாண்ட முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் அளித்தால் எங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும். அதற்காகத்தான் கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம்'' என்றார் தேசிய சர்க்கரை தொழிலாளர் சம்மேளனத்தின் (ஐ.என்.டி.யூ.சி. சார்பு) மாநில கூடுதல் பொதுச்செயலர் எம். செல்வம்.

கரும்பு அரவை பருவமானது கடந்த அக்டோபரில் தொடங்கியது. மே வரை அரவைப் பணி நடைபெறும். இப்போது அரவையின் உச்சகட்டப் பருவம் ஆகும். வேலைநிறுத்தத்தால் கரும்பு வெட்டுவது தடைபட்டுள்ளது. வயல்வெளிகளில் கரும்பு வீணாகி வருகிறது.

விழிபிதுங்கும் விவசாயி: ""கரும்பை பயிரிட்ட 11 முதல் 12 மாதங்களில் வெட்டினால்தான் சர்க்கரைச் சத்து அரசு நிர்ணயித்துள்ள 9.5 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும். விவசாயிகளும் டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் பெற முடியும். கரும்பை வெட்டுவது காலதாமதமாகி வெயில் காலம் தொடங்கி விட்டால், சர்க்கரை சத்து குறைந்து விவசாயிகளுக்கு கிடைக்கும் விலையும் குறையும். இந்த ஆண்டின் சர்க்கரைச் சத்து அளவை வைத்து அடுத்த ஆண்டுக்கான விலையை நிர்ணயம் செய்யும் முறை இருப்பதால், இந்த பாதிப்பு அடுத்த ஆண்டும் தொடரும். அடுத்த பயிரை சாகுபடி செய்வதிலும் காலதாமதம் ஏற்படும். கரும்பு வெட்டுக்கு ஆள் கிடைக்காது. இன்னும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் கரும்பு வெட்டப்படாமல் உள்ளது. எனவே, கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த வேலைநிறுத்தத்தால் விழி பிதுங்கி நிற்கின்றனர்'' என்றார் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சின்னச்சாமி.

தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாது என நிதித்துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில், கூடுதல் ஊதியத்தை ஈடுசெய்ய வேறு வகையில் பணப் பலன் வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடர்கிறது.

அதிகாரிகள் கருத்து: ""கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளில் 10 ஆலைகளில் மட்டுமே வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அவற்றில் சுமார் 3,500 பேர் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர்கள் படிப்படியாக வேலைக்கு திரும்பி வருகின்றனர். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறும். அதில் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்'' என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com