

காஞ்சிபுரம், பிப். 27: மூங்கில் கூடைத் தொழில் படிப்படியாக அழிந்து வருவதாக தொழிலாளர்கள் கவலைத் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் நமது பழம்பெரும் தொழில்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன.
அந்த வரிசையில் மூங்கில் கூடைத் தொழிலும் இப்போது அழிவின் விளிம்பில் காலத்தை விரல் விட்டு எண்ணிக் கொண்டுள்ளது என்றே கூறலாம். காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூங்கில் கூடைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ÷
ஆனால் இப்போது இந்த தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே உள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு எதிரே தங்களது வாழ்க்கைப் பயணத்தை இன்றும் தொடரும் இவர்கள் மூங்கிலாலான கோழி அடைக்கும் பஞ்சாரக் கூடை, சாதம் வடிக்கும் கூடை, கோயில் இட்லி கூடை, இடியாப்பத் தட்டு, அர்ச்சனைத் தட்டு என பல வகையிலான மூங்கில்ப் பொருள்களை தங்களது கைவண்ணத்தில் உருவாக்கி வருகின்றனர்.
இப்போது அனைத்தும் பிளாஸ்டிக் மயமானதால், மூங்கில் கூடை, சீசன் தொழிலாகவே நடந்து வருவதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
அதாவது திருமண சீசன்களில் சாதம் வடிக்கும் கூடைகளும், கோயில் இட்லி கூடைகளும் விற்பனையாகின்றன. கோழி பஞ்சாரக் கூடைகளோ பெயரளவில்தான் விற்பனையாகிறது. இப்போது கிராமங்களில் பெரும்பாலும் கோழிகளை கம்பியால் வேயப்பட்ட கூடுகளில்தான் அடைத்து வைக்கின்றனர்.
இதே போல் தக்காளி, பழவகைகளை விளை நிலங்களில் இருந்து சந்தைகளுக்கு மூங்கில் கூடைகளில்தான் வியாபாரிகள் எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் இப்போது அதுவும் பிளாஸ்ட்டிக் கூடைகளாகிவிட்டன. கூடை பின்னும் தொழிலாளி ஜகநாதன் (65) கூறியது: "இந்த தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் இந்த தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறேன்.
ரூ. 2, ரூ. 3-க்கு விற்பனையான கூடைகள் எல்லாம் இப்போது ரூ. 100 மற்றும் அதற்கு மேல்தான் விற்பனை செய்யப்படுகிறது.
எவர்சில்வர், பிளாஸ்டிக் என்று வந்த பிறகு மூங்கில் கூடைகளை வாங்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் இப்போது கூடை முடையும் தொழிலில் ஈடுபட்ட பெரும்பாலான குடும்பத்தினர், தனியார் தொழிற்சாலைகளில், கூலி வேலைக்கு சென்று விட்டனர். மூங்கில் கூடையை முறையாக பயன்படுத்தினால் பல ஆண்டுகள் வரை அதை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த பிளாஸ்டிக் யுகத்தில் மக்களுக்கு இதெல்லாம் சற்றும் யோசிப்பது இல்லை' என்று புலம்பினார்.
இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு பிறகு நம் குழந்தைகளை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றுதான் மூங்கில் கூடைகளை காட்ட வேண்டிய நிலை, உருவாகிவிடும். ÷
இவ்வாறு அழிவின் விளிம்பில் உள்ள இது போன்ற தொழில்களை காக்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில்
மூங்கிலால் கூடை முடையும் பெண்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.