
சென்னை, பிப். 27: திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற லட்சியத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுக தலைவர்கள் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கருணாநிதி பேசியது: மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் என்றுதான் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களிலும் நான் சொல்லி வருகிறேன்.
தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றுதான். 1942-ம் ஆண்டு திராவிட நாடு இதழில் அண்ணா எழுதிய தலையங்கத்தில் தமிழும் திராவிடமும் ஒன்றுதான் என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதமான ஜனகணமனவில் திராவிட உத்கல பங்கா என்று ரவீந்திரநாத் தாகூர் என்று எழுதியுள்ளார்.
சென்னை கடற்கரையில் உ.வே.சாமிநாதய்யர் சிலை உள்ளது. அந்தச் சிலையின் பீடக் கல்லில் திராவிட வித்யாபூஷண என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படிச் சொல்வதால் அந்தக் கல்லே நாளை காணாமல் போனாலும் போகக்கூடும்.
தமிழ், செம்மொழி என்றெல்லாம் இருந்தால் அவற்றை அகற்றக்கூடிய ஆட்சிதான் இப்போது நடைபெற்று வருகிறது.
தமிழர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறோம் என்றும் திராவிட இனம் தலையெடுக்கக்கூடாது என்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சிலர் வருகின்றனர். அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
1921-22-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்த சமுதாயத்தைச் சேர்ந்தோர் பெரும்பாலானோர் வெற்றிபெற்றனர். அப்போது இந்திய அரசு ஆதிக்க சமுதாயத்தைப் பழிவாங்கும் அடையாளமாக பிற சமுதாயத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் விழித்தெழுந்து உள்ளனர் என்று கூறியிருந்தது.
அப்படி விழித்தெழுந்த இனம் இப்போது அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக பழி வாங்க காத்திருக்கிறது. திராவிட இனத்தை புழுக்களாக கருதுபவர்களை புலிகளாக மாறி நாம் விரட்டமாட்டோமா தமிழர்கள் இப்போது ஓரளவு நிமிர்ந்து நிற்கின்றனர். இதனை அழித்தொழிக்க எல்லாப் பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தல் வந்த வண்ணமாக உள்ளது.
எனவே இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்த இளைஞர்கள் முன் வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர் போராட்டங்கள் வாயிலாக தொடங்கிவிட்டோம் என்றே சொல்ல விரும்புகிறேன்.
ராஜாஜி, ஹிந்தி ஆதிக்கத்தை திணித்தபோது 13 வயதில் கொடியேந்திப் போராடினேன். என்னுடைய வழித்தோன்றல்கள் பலர் இருக்கவே செய்வார்கள்.
தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க என்று போராடி வெற்றி பெறுவோம். கூடுமெனில், திராவிட நாடு திராவிடர்களுக்கே எனும் லட்சியத்திலும் வெற்றிபெறுவோம் என்றார் கருணாநிதி.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற திராவிட இயக்க 100-ஆம் ஆண்டு
தொடக்க விழாவில் பேசுகிறார் திமுக தலைவர் மு.கருணாநிதி. உடன் (இடமிருந்து)
பேராசிரியர் நன்னன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்,
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,
பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.